பூச்சோங், ஏப்.6-
தலைநகர், கம்போங் அத்தாப்பில் அமைந்துள்ள மைபிபிபி கட்டடம் அக்கட்சி உறுப்பினர்களுக்குச் சொந்தமானது. இதில் தனிநபர் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் உதவி தலைவர் டத்தோஸ்ரீ மெக்லின் டி குரூஸ் கூறினார்.
மைபிபிபி கட்டடம் மற்றும் பிந்தாங் இராடாட் நிறுவனத்தில் உள்ள தங்களின் 100,000திற்கும் கூடுதலான பங்குகளை திவால் துறையின் தலைமை இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் மைபிபிபி கட்சியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் மற்றும் அவருக்குச் சொந்தமான கேவியஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தைப் பணித்தது,
தங்களுக்குத் தெரியாமல் மைபிபிபி கட்டடத்தை உரிமை மாற்றம் செய்ததாக கேவியஸ், இதர அறுவர், கேவியஸ் ஹோல்டிங்ஸ் உட்பட இரு நிறுவனங்களுக்கு எதிராக டத்தோஸ்ரீ மெக்லின் உட்பட 12 முன்னாள் மைபிபிபி உறுப்பினர்கள் வழக்கு தொடுத்தனர்.

மைபிபிபி கட்டடத்தை உரிமை மாற்றுவதற்கு அனுமதி கோரி டத்தோ ஏ.சந்திரகுமணன் மற்றும் டத்தோ லாய் கிம் சியோங் செய்த விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.
கேவியஸ், கேவியஸ் ஹோல்டிங்ஸ், சந்திரகுமணன், லாய் கிம் சியோங் மற்றும் அவரின் ஏஜெண்டுகள் பிந்தாங் இராடாட் நிறுவனத்தின் பங்குகளை பெயர் மாற்றம் செய்வதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டதை இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் மெக்லின் சுட்டிக் காட்டினார்.
அதே வேளையில், மைபிபிபி கட்டடம் காலி செய்யப்பட்டு திவால் இலாகா தலைமை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் பணித்துள்ளது.
கேவியஸ், சந்திரகுமணன் மற்றும் லாய் கிம் சியோங் ஆகிய மூவரும் வழக்கு செலவு தொகையாக 3 லட்சம் வெள்ளியும் திவால் இலாகா தலைமை இயக்குநருக்குத் தலா 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியும் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சங்கங்களின் பதிவிலாகா கடந்த 2019 ஜனவரி 14 ஆம் தேதி கட்சியின் பதிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து கேவியஸும் தாமும் தனித்தனியே நடத்திய மத்திய செயலவை கூட்டம் செல்லாது என்று தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
கட்சியின் பதிவு ரத்து செய்யப்பட்டநிலையில் மத்திய செயற் குழுவில் . சந்திரகுமணன் மற்றும் லாய் கிம் சியோங் ஆகிய இருவரையும் இடம் பெறச் செய்தது செல்லாது என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கேவியஸ் கடிதம் வழி தெரிவித்திருந்த நிலையில் கட்சி சார்ந்த விவகாரத்தில் இவர் எந்த முடிவையும் எடுக்க முடியாது.
இந்நிலையில் மைபிபிபி கட்டடத்தை கேவியஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றும் சதித் திட்டத்தில் சந்திரகுமணன் மற்றும் லாய் கிம் சியோங் இருவரும் ஈடுபட்டதாக மெக்லின் சொன்னார்.
இக்கட்டடம் கட்சி உறுப்பினர்களுக்குச் சொந்தமாகும். தனி நபர் எவரும் இதில் சொந்தம் கொண்டாட முடியாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இதனிடையே, மைபிபிபி சீரிய தலைமைத்துவத்துடன் மீண்டும் செயல்படுவதற்கு ஏதுவாக விரைவில் கட்சித் தேர்தல் நடத்துவதற்கு சங்கங்களின் பதிவிலாகா அனுமதிக்க வேண்டும் என்றும் மெக்லின் கேட்டுக் கொண்டார்.