-நக்கீரன்
கோலாலம்பூர், ஜூன 18:
தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், மலேசியாவில் தமிழர்தம் பண்பாடும் இந்திய சமூகத்தின் கலை-கலாச்சாரத் தன்மையும் தொடர்ந்து கட்டிக்காக்கப்-பட வேண்டும் என்ற நோக்கில், 2010-ஆம் ஆண்டில் உருவாக்கிய டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை-கலாச்சார அறவாரிய ஏற்பாட்டில் இன்னொரு கலைப் படைப்பான ‘பூலித் தேவன்’ என்னும் வரலாற்று நாடகம் படைக்கப்பட இருக்கிறது.
பீஷ்மர், கடாரம் வென்ற இராசேந்திர சோழன், சாணக்கியர் சபதம், பொன்னியின் செல்வன், வாலி, கண்ணகி, வள்ளித் திருமணம், சிவ தாண்டவம், மதுரைப் பாண்டியன் என்றெல்லாம் புராண, வரலாற்று நாடகங்களை கூட்டுறவு சங்கம் இதுவரை படைத்துள்ளது. இவற்றில், கண்ணகியும் சிவ தாண்டவமும் நாட்டிய நாடகங்கள் ஆகும்.

இராஜேந்திர சோழ நாடகக் குழுவினர், தமிழ்நாட்டிற்கு சென்று மதுரை, தஞ்சாவூர் போன்ற வரலாற்று நகரங்களில் நாடகத்தை நடத்தி, தமிழக அரசின் பாராட்டையும் பெற்றனர். இதற்கான ஏற்பாட்டு ஆதரவையும் நிதிப் பொறுப்பையும் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை-கலாச்சார வாரியம் ஏற்றது குறிப்பிடத்தக்கது.
இடையில், கோவிட்-19 பரவல் காரணமாக, மக்கள் ஒன்றுகூடுவது இயலாமல் இருந்ததால், இந்த வாரியத்தால் கலைப் படைப்பு எதுவும் இடம்பெறாமல் இருந்தது.
தற்பொழுது, நாடு பெருந்தொற்று காலத்தில் இருந்து குறுந்தொற்று பருவத்திற்கு மாறியுள்ள நிலையில், இந்த வரலாற்று நாடகம் தயாராகி வருகிறது. இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக முதன் முதலில் விடுதலை முழக்கத்தை எழுப்பிய தமிழ் மறவர் வீரப் பூலித் தேவனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று நாடகம் ஜூன் 25, 26(சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் மலாயாப் பல்கலைக்கழக எக்ஸ்பெரிமெண்டல் அரங்கத்தில் இரவு 8:00 மணி அளவில் இலவசமாக நடைபெற உள்ளது.
இந்த இரு நாட்களிலும் பொதுமக்கள் திரளாக வந்து, இந்த வரலாற்று நாடகத்தைக் கண்டு களிக்கும்படி டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை-கலாச்சார வாரியத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த நாடகத்திற்கான கதை-வசனத்தை வெண்முத்து எழுதி இருக்கிறார். ‘விண்வெளி’ ச. விஜயன் என்பார் இயக்கியுள்ள இந்த மேடை நாடகம் இரண்டரை மணி நேரம் நடைபெறும் என்று இந்நாடகத்தைப் படைக்கவுள்ள கிள்ளான் தமிழர் நாடகக் கலை மன்றத் தலைவர் பாலு சின்னு தெரிவித்துள்ளார்.
இதில் நடிக்கும் 30 கலைஞர்களில் 20 ஆண்கள், 10 பெண்கள் இடம்பெற்று உள்ளனர். இந்த 30 பேரில் 10 கலைஞர்கள் மாணவர்கள்; விடுதலை தாகத்தையும் 300 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திர சூழலையும் நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்தும் மூன்று பாடல்கள் இந்த நாடகத்தில் இடம்பெற்றுள்ளன என்றும் பாலு கூறினார்.
இந்தப் பாடல்களை, கூட்டுறவு சங்க டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் நிருவாக அதிகாரியும் எழுத்தாளருமான கரு.பன்னீர் செல்வம் இயற்றி உள்ளார்; குழல் கேசவன் இசை அமைத்துள்ளார்.
இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் என்று சொல்லப்படும் சிப்பாய்க் கலகத்திற்கு முன்னோடியாக அமைந்தது பூலித் தேவனின் வீரமுழக்க வாழ்க்கை.
1750இல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, தென்னாட்டுப் பாளையக்காரர்கள் அனைவரும் வரி கொடுக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவைக் கேட்டு, ஒரு பாளையப்பட்டுக்கு பொறுப்பேற்று குருநில மன்னனைப் போல விளங்கிய பூலித் தேவன் வெகுண்டு எழுந்தார். அது முதல், அவரின் விடுதலை முழக்கம் ஓங்கி ஒலித்தது.
இந்த நாடகத்தில் 10 வயது சிறுவன், பின்னர் வளர்ந்த பூலித் தேவன் என இரு பாத்திரங்கள் பூலித் தேவனுக்காக இடம்பெற்றுள்ளன. ஒண்டி வீரன் பாத்திரமும் குறிப்பிடத்தக்கது. அமைச்சர், யூசுப் கான் ஆகிய இரு பாத்திரங்களும் முதியவர்களுக்கான வேடம். புலி வேட்டையை வீர விளையாட்டாகவும் பொழுதுபோக்காகவும் கொண்டிருந்ததால் புலித் தேவன் என்றும் அழைக்கப்பட்ட இந்த குறுநில மன்னன் சிறந்த சிவநெறிச் செல்வராகவும் விளங்கி இருக்கிறார்.

இந்த அம்சங்கள் யாவும், கிள்ளான் நாடகப் பண்ணையாக இருந்து, இப்பொழுது தமிழர் நாடகக் கலை மன்றமாக மாறியுள்ள இந்த கலை மையம் படைக்கும் 11-ஆவது நாடகமான இதில் பிரதிபலிக்கும் என்று தலைவர் பாலு சின்னு தெரிவித்துள்ளார்.
மலேசியத் தமிழ்க் கலை ஆர்வலர்களுக்கும் சமுதாயப் பற்றாளர்களுக்கும் பிடித்த நாடகமாக இது அமையும் என்பது திண்ணம்.