சுங்கை சிப்புட், ஜுன். 20

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் குறைகளை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு , அவர்களுக்குத் தன்முனைப்பு வழங்குவதில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் டாக்டர் கோபிநாத் கருப்பன் கூறினார்.

பெற்றோர்கள் இப்படிச் செய்வதன் வழி எதிர்காலத்தில் ஒரு தலைசிறந்த குடிமகனை உருவாக்க முடியும் என்று டோவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்குக் கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வைத் தொடக்கி வைத்த போது வழக்கறிஞர் டாக்டர் கோபிநாத் கருப்பன் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சுங்கை சிப்புட் வட்டாரத்தைச் சேர்ந்த டேவன்பி தோட்டத் தமிழ்ப்பள்ளி, எல்பில் தோட்டப்பள்ளி, சுங்க ரேலா பள்ளி மற்றும் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்திற்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்திற்கும் டாக்டர் கோபிநாத் கருப்பன் நன்றி கூறினார்.

இந்த நிகழ்ச்சி ம.இ்.கா தேசியத் தலைவரும் இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதருமான டான்ஸ்ரீ டத்தோஶ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்வு காணும் தலைவராக அவர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதோடு இங்குள்ள மக்களின் தேவையை அறிந்து குறிப்பாக சுங்கை சிப்புட் வட்டார தமிழ்ப்பள்ளிகளின் தேவைகளை அறிந்து சேவையாற்றி வருகிறார்.

அவரின் சிந்தனையால், மாணவர்களின் தேவையை அறிந்து இந்நிகழ்ச்சிக்கு முன்னுரிமை வழங்கியுள்ளார்.
இயக்கங்கள் மற்றும் அரசு சாரா சங்கங்கள் இனிவரும் காலங்களில் அவரவர் பகுதியில் அங்குள்ள தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும்.

அதன் அடிப்படையில் பேராக் எம்.ஐ.ஓய்.டி.எப். இயக்கம் இத்திட்டத்திற்கு 5 ஆயிரம் ரிங்கிட் நன்கொடையாக வழங்கி உதவியுள்ளது. இம்மாதிரியான உதவிகள் நம் தமிழ்ப்பள்ளிகளுக்கு பகீர்ந்தளிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் வாயிலாக மாணவர்களின் கண்பார்வை பிரச்சினைகளைத் தீர்வு காண முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

இந்த 200 மாணவர்களின் கண் பரிசோதனை மேற்கொள்வதற்கு உதவிகள் வழங்கிய பேராக் சாய் இருதய நிர்வாக இயக்கத்தினருக்கு இவ்வேளையில் நன்றி. அவர்கள் டாக்டர் சுப்பிரமணியத்தின் தலைமையில் கண் பரிசோதனைகள் மேற்கொள்வதோடு, தேவைப்படும் மாணவர்களுக்கு மூக்குக் கண்ணாடி இலவசமாக வழங்கும் திட்டம் பாராட்டுக்குரியது.

இந்த மனிதநேய நிகழ்வில் பேராக் எம.ஐ.ஓய.டி.எப். செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் க. கோபிநாத், சுங்கை சிப்புட் ம இ கா தொகுதி செயலாளர் அசோக்குமார், பள்ளித்தலைமையாசிரியர் வீ. இராஜம்பாள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ப. கணேசன், ம இ கா கிளைத் தலைவர் கிருஷ்ணன், டாக்டர் சுப்பிரமணியம், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்