ஈப்போ, ஜூன் 22-

அண்மையில் வெளியாகிய எஸ்பிஎம் தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள், தங்களின் முடிவுகளுக்கேற்ற சரியான உயர்க்கல்வி பாதையைத் தேர்ந்தெடுக்கும் முக்கியக் காலக்கட்டத்தில் இருக்கின்றனர். இவர்களுக்குச் சரியான வழிகாட்டலை வழங்கும் வகையில் தேசிய மஇகா இளைஞர் பிரிவும் பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவும் இணைந்து பேரா மாநிலத்தில் உயர்க்கல்வி இலட்சிய பயணம் எனும் வழிகாட்டி கருத்தரங்கை இரண்டு இடங்களில் ஏற்பாடு செய்துள்ளனர்.

இக்கருத்தரங்கம் வருகின்ற 26.06.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் சுங்கை சிப்புட், டேவான் ஓராங் ராமாய் துன் சம்பந்தன் மண்டபத்திலும், அதே நாள் மாலை 2.00 மணியளவில் ஈப்போ, சுங்கை பாரி வழி ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவிருக்கின்றது.

இக்கருத்தரங்கில் அரசாங்க உயர்க்கல்விக்கூடங்கள், மெட்ரிகுலேசன், ஆசிரியர் கல்விக் கழகம் ஆகியவற்றுக்கான புதிய விண்ணப்பங்களை மேற்கொள்ளுதல், விண்ணப்பங்களைச் சரிசெய்தல், உபகாரச் சம்பளங்களை விண்ணப்பிப்பதற்கான விளக்கங்கள் ஆகியன வழங்கப்படவுள்ளன.

அதோடு, இக்கருத்தரங்கிற்கு வருகையளிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்திந்து அவரவர் தேர்ச்சிக்கு ஏற்ப அவர்களுக்கான சரியான உயர்க்கல்வி பாதைக்கு வழிக்காட்டும் அங்கமும் இடம்பெறவுள்ளது. மாணவர்களின் வாழ்வின் மிக முக்கிய தருணத்தில் அவர்களுக்குச் சரியான வழிகாட்டலை வழங்கும் வண்ணம் முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கருத்தரங்கிற்கு, எஸ்பிஎம் தேர்வு முடிவுகளைப் பெற்ற இந்திய மாணவர்கள், எஸ்திபிஎம் தேர்வெடுக்கும் இந்திய மாணவர்கள் என அனைவரும் கலந்து பயன்பெருமாறு பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தியாகசீலன் கணேசன் கேட்டுக் கொண்டார்.

இக்கருத்தரங்கு சுங்கை சிப்புட்டில் ம.இ.காவின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையிலும், ஈப்போ புந்தோங்கில் தொகுதித் தலைவர் S. ஜெயகோபி அவர்களின் தலைமையிலும் நடத்தப்படவுள்ளது

இக்கருத்தரங்கம் தொடர்பான மேலதிக விவரங்களைப் பெறுவதற்கு மாநில இளைஞர் பிரிவுச் செயலாளர் சிவபாலன் திருச்செல்வம் அவர்களை 0165636046 எனும் எண்களில் தொடர்புகொள்ளலாம என அவர் தெரிவித்தார்.