செமினி, ஜூன் 22-

       இங்கு ஜாலான் பாங்கி, தாமான் பத்து தீகாவில் உள்ள (முன்னாள் டுனடியன் தோட்டம்) 22 வீடுகளுக்கு  நிலப்பட்டாக்கள்,   குடியிருப்பாளர்களின் கழிவுநீர் தொட்டி பிரச்சினை, கால்வாய் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரைவில்  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என்று இம்மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.

     தோட்டப் பாட்டாளிகளுக்காக இலவசமாக வழங்கப்பட்ட இந்த வீடுகள் நிரந்தர குடியிருப்பு சான்றிதழ்களைக்  கொண்டிருக்கவில்லை என்று இக்குடியிருப்பு பகுதி மக்களின் பிரச்னைகளை நேரில் கண்டறிவதற்காக மேற்கொண்ட வருகையின்போது அவர்  குறிப்பிட்டார்.

      இது தவிர்த்து, ஆலயம் மற்றும் தேவாலயத்திற்கான நிலமும் அரசாங்க பதிவேட்டில் இடம் பெற்றிருக்க வேண்டும். இது பிற்காலத்தில் சட்ட நடவடிக்கையில் இருந்து இந்த வழிபாட்டு தலங்களைப் பாதுகாக்கும் என்றார்.

          இந்த விவகாரங்களுக்குத்  தீர்வு காணும் பொருட்டு  காஜாங் நகராண்மைக் கழகம்,  மேம்பாட்டுத் திட்டமிடல் பிரிவு,  நில அலுவலகம், நில மேம்பாட்டாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகளின் பொறுப்பாளர்களுடன்  பேச்சு நடத்தப்படும் என்று கணபதிராவ் கூறினார்.

       அதே சமயம்,  கால்வாய் பிரச்சினை, மழைக் காலங்களில் வீடுகளில் நீர் புகுதல், பழுதான வீட்டின் கூரைகள், கழிவறையில் கழிவுநீர் தேங்கிக் கிடப்பது போன்ற குடியிருப்பாளர்களின் அசௌகரியமானப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண ஏதுவாக வரும் ஜூலை 8 ஆம் தேதி காஜாங் நகராண்மைக் கழகத்தில் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வர் என்றார் அவர்.

      தாமான் பத்து தீகா குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆழமாகக் கேட்டறிந்தது மட்டுமின்றி அவற்றை காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர், ராமச்சந்திரன் அர்ஜுனனின் கவனத்திற்குக் கொண்டு சென்ற உலு லங்காட் கெஅடிலான் தொகுதி தலைவர் ராஜன் முனுசாமியின் முயற்சியை கணபதி ராவ் பாராட்டினார்.

      “இருவருமாகச் சேர்ந்து இந்த வீடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்டறிந்தனர். அதன் பின்னர் என்னிடம் தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக் கூறினர்” என்றார்.

இதனிடையே, நேற்று முன்தினம் நடைபெற்ற கணபதிராவுடனான சந்திப்பில் காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ஜூனன் உள்ளிட்ட நகராண்மைக் கழகப் பொறுப்பாளர்கள், ராஜன் முனுசாமி, கிராமத் தலைவர் நடேசன் ஆகியோரோடு குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகள் வாசுதேவன் குட்டிக் கிருஷ்ணன் மற்றும் ஜெயபாலன் லெட்சுமணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

      பாதிக்கப்பட்டக் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்கு வருகை புரிந்து நிலைமையை நேரில் கண்டறிந்தமைக்காக ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவிற்கு ராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.     

இக்குடியிருப்பாளர்களின் பிரச்சினைகளை கணபதி ராவின் கவனத்திற்குத் தாம் கொண்டு சென்றதாகவும் மறுநாளே அவர் இவர்களின் வீடுகளுக்கு நேரில் வருகை புரிந்ததாகவும் இது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இவர் கொண்ட கடப்பாட்டையே  காட்டுகிறது என்று ராஜன் விவரித்தார்.