புத்ராஜெயா, ஜூன் 27-

மலேசியாவின் முதல்நிலை ஸ்குவாஷ் வீராங்கனையான எஸ். சிவசங்கரி (வயது 23) பயணித்த கார் விபத்தில் சிக்கியது. 

மாஜூ எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் லோரியுடன் அவரது கார் விபத்துக்குள்ளானதாக சைனா பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதோடு கார் தீ பிடிக்கும் மின் சிவசங்கரி மீட்கப்பட்டதாகவும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதோடு அவசர சிகிச்சைக்காக புத்ராஜெயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது அவரது உடல்நலம் குறித்த எந்த செய்தியும் வெளிவர வில்லை. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது சுயநினைவில் இருப்பதாகவும் அறியப்படுகின்றது.

ஒரே நெடுஞ்சாலையில், உயர்மட்ட விளையாட்டு வீரர் ஒருவர் சம்பந்தப்பட்ட பெரும் விபத்து நிகழ்வது சில ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக 2020ஆம் ஆண்டு மாஜூ எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில்  ஜப்பான் பேட்மிண்டன் வீரர் கெந்தோ மொமொதா (Kento Momota)பயணித்த வாகனம் (Van) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதன் ஒட்டுநர் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல்நிலை வீரராக இருந்த கெந்தோ அதன் பிறகு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

சிவசங்கரி விபத்துக்குள்ளானதை மலேசிய ஸ்குவாஷ் சங்கத்தின் தலைவர் மேஜர் எஸ். மணியம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது உண்மையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம். காயம் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் அவர் காமன்வெல்த் போட்டியில் விளையாட முடியாத அளவிற்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது.

என்று மணியம் தெரிவித்தார்.

காமன்வெல்த் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை பர்மிங்காலில் நடக்கின்றது. பெண்களுக்கான தனிநபர் இரட்டையர் பிரிவில் அவர் பதக்கம் வெல்லும் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.