கோலாலம்பூர், ஜூலை 1-
நாட்டின் பிரசித்தி பெற்ற வர்த்தக சபையான கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் புதிதாக வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர், சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் உள்ளிட்ட அனைத்து இந்திய வர்த்தகர்களும் பயனடையும் வகையில் இலவச வர்த்தக ஆலோசக மற்றும் வழிகாட்டி பயிற்சி திட்டத்தைத் தொடங்கவிருக்கிறது.

இப்பயிற்சி வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை சங்க கட்டடத்தில் நடைபெறும்.

தங்கள் வர்த்தகம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக வர்த்தகர்கள் நியமிக்கப்பட்ட வர்த்தக நிபுணர்களை அன்றைய தினம் நேரடியாகச் சந்தித்து ஆலோசனைகள் பெறலாம். முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இப்பயிற்சியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

இப்பயிற்சிக்கான முன் பதிவு மற்றும் தங்களின் வர்த்தகம் தொடர்பாக ஆலோசனை பெற விரும்புவோர் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்துடன் 03-26931033 அல்லது enquiry@klsicci.com.my எனும் மின் அஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம்.

வர்த்தகர்கள் தங்கள் தொழிலில் பீடு நடை போடுவதற்கு உறுதுணையாக விளங்கும் இப்பயிற்சியை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி வர்த்தகர்களை இச்சங்கத்தின் தலைமைச் செயலாளர் டோனி கிளிபோர்ட் கேட்டுக் கொண்டார்.