கோலாலம்பூர், ஜூலை 1 –

இவ்வாண்டு எஸ்.பி.எம் தேர்வில் பங்கு கொள்ளும் இந்திய மாணவர்களுக்கான தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கிய பாடங்களின் போதனை முறை இடைநிலைப்பள்ளிகளில் உடனடியாக தொடங்க வேண்டும் என்று ம.இ.கா கல்விக்குழு தலைவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கல்வி அமைச்சை கேட்டுக்கொண்டார்.

ஆறு ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளிலும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழியும் தமிழ் இலக்கியம் பயின்று வந்த மாணவர் படிப்பதற்கு இடைநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கல் தடை விதிப்பது வேதனைக்குரியதாகும்.

தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் தொடருமானால் இந்நாட்டில் தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் சாவு மணி அடிப்பது போல் உள்ளது. இன்று ஜாலான் புக்கி மேவா இடைநிலைப்பள்ளியில் 28 எஸ்.பி.எம் மாணவர்கள் தமிழ் இலக்கிய பாடம் போதிப்பதற்கு தலைமையாசிரியர் தடையாக இருப்பது மட்டுமே அல்லாமல் மாணவர்கள் பயில உள்ள தமிழ் இலக்கிய பாடபுத்தகங்களை மீட்டுக்கொண்ட தலைமையாசிரியரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மேலும் தலைமையாசிரியரின் அடாவடித்தனம் பள்ளிகளில் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கிய பாடங்களில் தடைகள் பாய்வது கண்டிக்கப்பட வேண்டியது இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்

மேலும் நாட்டில் உள்ள இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் மொழி POL மற்றும் இலக்கிய தேர்வு பாடங்களை போதிக்கும் சூழ்நிலை தடைப்பட்டால் அதை மீண்டும் அமுல்படுத்துவதற்கான நிலையில் ம.இ.கா கல்விக்குழு களமிறங்கும்.

இதன் தொடர்பாக ம.இ.கா தேசிய தலைவர் மற்றும் இந்திய தெற்காசியா நாடுகளுகான சிறப்பு தூதருமான டான்ஶ்ரீ டத்தோஶ்ரீ சா.விக்னேஸ்வரன் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இதன்பின் கல்வி அமைச்சரை ம.இ.காவினர் சந்திப்போம் என அவர் குறிப்பிட்டார்.

ஆரம்ப கல்வியை தமிழ்ப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் தொடர்ந்து இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி மற்றும் இலக்கிய பாடங்களை தேர்வு பாடமாக எடுப்பதற்கு யாரும் தடையாக இருக்கக்கூடாது. இது அம்மாணவர்களின் சுய உரிமை, இதனை அப்பள்ளி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும் இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழி மற்றும் இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு தடையாக இருக்கும் தலைமையாசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் . ஆகவே நாட்டில் இதுபோன்ற நிலையில் உள்ள இடைநிலைப்பள்ளிகளை ம.இ.கா கல்வி குழ பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

எஸ்.பி.எம் தேர்வு இன்னும் சில மாதங்களில் தொடங்க விருப்பதால் அத்தேர்வில் தமிழ்மொழி மற்றும் தமிழ் இலக்கிய பாடம் தேர்வு பாடமாக எடுக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை களுக்கு தீர்வு காண ம.இ.கா கல்விக்குழு களமிறங்கும் என்று டத்தோ நெல்சன் ரெங்கநாதன் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.