கோலாலம்பூர், அக்-12-
வரும் பொதுத் தேர்தலில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தால் தாம் அதனை மனநிறைவுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக இதன் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
இத்தேர்தலில் போட்டியிடும் மஇகா வேட்பாளர்கள் பட்டியல் இன்னும் வெளியிடப்படாத நிலையில் தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடுவதற்குத் தமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அத்தொகுதியில் களம் இறங்கத் தாம் தயாராக இருப்பதாக மனித வள அமைச்சருமான சரவணன் குறிப்பிட்டார்.
இத்தொகுதியில் தாம் போட்டியிட்டால் கடந்த காலங்களைப் போல் மக்கள் தமக்குப் பிளவுபடாத ஆதரவை வழங்குவர் என்று தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக இங்குள்ள விஸ்மா எச்ஆர்டி கார்பரேஷனில் தீபாவளி வாழ்த்துச் செய்தி மற்றும் ஊடகவியலாளர்களுடனான மதிய உணவு விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார்.
15 ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் சரியான தேர்வாக மஇகா விற்கு இரண்டு அமைச்சர்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதையும் இக்கட்சியின் தேசிய துணைத் தலைவருமான சரவணன் சுட்டிக் காட்டினார்.
” கடந்த காலங்களில் துன் மகாதீர், துன் அப்துல்லா படாவி மற்றும் டத்தோஸ்ரீ நஜீப் ஆகிய அம்னோ தலைவர்களுடன் மஇகா கொண்டிருந்த உறவு வேறு. தற்போது பிரதமராக இருக்கும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியுடன் மஇகா கொண்டிருக்கும் உறவு வேறுவிதமாக அமைந்துள்ளது “.
வியூக பங்காளித்துவ அடிப்படையில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரியின் தலைமைத்துவத்தின் கீழ் இப்போது ஆண்டுதோறும் 25 மில்லியன்வெள்ளி நமது பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படுகிறது. இதன் வழி இந்திய மாணவர்கள் உதவி தொகை வாயிலாக மருத்துவம் பயிலலாம் என்று அமைச்சர் விவரித்தார்.


