பெட்டாலிங் ஜெயா, அக். 10-
15 ஆவது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் இன்று கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட 60 நாட்களில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
பொதுத் தேர்தல் இவ்வாண்டு இறுதிக்குள் நடைபெறலாம் என்ற ஆருடங்களுக்கு மத்தியில் 2023 பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சில நாட்களிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்ற அம்னோவின் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது போன்று அமைந்துள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு பக்காத்தான் ஹராப்பானும் பெரிக்காத்தான் நேஷனலும் கடும் ஆட்சேபம் தெரிவித்து வந்தன.
வெள்ளப் பேரிடர், பொருளாதார நிலை மற்றும் நோய் போன்ற காரணங்களால் பொதுத் தேர்தல் விரைவில் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று இவ்விரு கூட்டணி கட்சிகளும் வலியுறுத்தி வந்தன.


