தீபாவளியையொட்டி 300 இந்திய குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள்!

278

கோலாலம்பூர், அக்.23-      

தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு வங்சா மாஜுவில் வசிக்கும் 300 இந்திய குடும்பங்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக வங்சா மாஜு கெஅடிலான் தகவல் பிரிவு தலைவர், ஆர்.விஜேந்திரன் தெரிவித்தார்.    

அரசு சார்பற்ற இயக்கமான ‘”சீட் ஆஃப் லவ்'” ஏற்பாட்டின் கீழ் ஆலயங்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.     

இந்த உதவி மக்கள் குறிப்பாக பி40 பிரிவினரின் சுமைகளைக் குறைப்பதற்காக வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.     

வங்சா மாஜு தீபாவளி நலன் காக்கும் இத்திட்டமான இது டானாவ் கோத்தா, தெராத்தாய் மேவா, செக்ஷன் 2, தாமான் மெலாத்தி ஆகிய பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களை உட்டுத்திய உணவுக் கூடைகள்  விநியோகிக்கும் நடவடிக்கையாகும்  என்பதை  விஜேந்திரன் சுட்டிக் காட்டினார்.     

கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை கோவிட் – 19 தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. எனினும், வங்சா மாஜு இந்தியர்களுக்கு நோன்புப் பெருநாள், தீபாவளி போன்ற பெருநாட்களில்  உதவிப் பொருட்களை இத்தொகுதி கெஅடிலான் தொடர்ந்து  வழங்கி வருவதாக அவர்  கூறினார் .   

இதனிடையே, இந்நிகழ்ச்சியின் பிரதான ஏற்பாட்டாளரான  சீட்  ஆஃப்  லவ்வுடன் இணைந்து  தாங்கள் மேற்கொள்ளும் இந்நடவடிக்கை  இவ்வட்டார கெஅடிலான் தலைவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்குமிடையிலான உறவை மேம்படுத்தும் என்று கெஅடிலான் வங்சா மாஜு தொகுதி தலைவர் என்றி லாய் நம்பிக்கை தெரிவித்தார்.    

“இதுபோன்ற உதவிகள் வசதி குறைந்தோர் தீபாவளித் திருநாளை தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு உதவும்” என்று இங்கு தெராத்தாய் மேவா ஸ்ரீ சிவ காளியம்மன் ஆலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.