ஈப்போ,அக்.29-
வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் 8 நாடாளுமன்ற மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடவிருப்பதாக பேரா ஜசெக அறிவித்துள்ளது.
இவற்றில் புதிதாக இடம் பெற்றுள்ள கிரிக் நாடாளுமன்ற தொகுதியும் சாங்காட் ஜோங் சட்டமன்ற தொகுதியும் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இத்தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் எண்மர் 40 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் .ஐவர் பெண்கள் என்று இங்குள்ள ஹோட்டல் கிந்தா ரிவர்ஃபிரண்ட்டில் பக்காத்தன் ஹாராப்பான் – பேரா ஜசெக வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கையில் இக்கட்சியின் தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் சியூ ஃபூக் குறிப்பிட்டார்.
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம். குலசேகரன் மற்றும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி.சிவகுமார் ஆகிய இருவரும் தங்கள் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் அதே தொகுதிகளில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைப் போன்றே ஏ.சிவநேசனுக்கும் சுங்கை சட்டமன்றத்திலேயே மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய முகங்களாக புந்தோங் சட்டமன்ற தொகுதியில் துளசி மனோகரனும் மாலிம் நாவார் சட்டமன்ற தொகுதியில் பவானி வீரையாவும் போட்டியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டது.


