கோலாலம்பூர் , நவ. 1-
      தங்களின் பண தேவைகளுக்கு சட்ட விரோத  வட்டி முதலைகளை நாட வேண்டாம் என்று சிலாங்கூர் சாஸ்தா உதவி அமைப்பு(சாஸ்தா) இந்திய சமூகத்தினருக்கு ஆலோசனை கூறுகிறது.


     வட்டி முதலைகளின் பிடியில் இருந்து மக்களை விடுவித்து அவர்களின் மேம்பாட்டுக்கு  உதவும் நோக்கத்தில் அமைக்கப்பட்டதே சாஸ்தா எனப்படும் சிலாங்கூர் சாஸ்தா உதவி அமைப்பு.


    சட்ட விரோத வட்டி முதலைகளால் பல குடும்பங்கள் நிம்மதியை  இழந்துள்ள வேளையில்  சிலர்  தற்கொலை புரிந்து கொண்டது வேதனையைத் தருகிறது என்று சாஸ்தா நிறுவனத்தின் தோற்றுநர் ராம்ஜி விவரித்தார்.
       வட்டி முதலைகளால்   எந்த நேரத்திலும் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் கடன் வாங்கியவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
           இத்தகு  சூழ்நிலையில் இருந்து பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தித் தருவதே தங்களின் முக்கிய நோக்கம் என்றார் அவர்.
           அவ்வகையில் இதுவரை  5,000 பேரின்  பிரச்சினைகளுக்குத் தாங்கள் வெற்றிகரமாகத் தீர்வு கண்டிருப்பதாக டாமான்சாரா பெர்டானாவில், சாஸ்தா அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராம்ஜி தெரிவித்தார்.
        தங்களின் சேவையை மலாய்க்கார சமூகத்தினருக்கு விரிவாக்கும் செய்யும் பொருட்டு மலேசிய இஸ்லாமிய பயனீட்டாளர் சங்கத்திடம் சாஸ்தா பேச்சு நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
      இதனிடையே, தங்களிடமிருந்து கடன் பெறுவோர் மரணமுறும் அல்லது நிரந்தர உடல் செயலிழப்புக்கு உள்ளாகும் பட்சத்தில் சாஸ்தாவிடமிருந்து அவர்கள் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த இயலாது.
         இதுபோன்ற தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில்  இவர்களுக்கு ஏஐஏ காப்புறுதி திட்டத்தைத் தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதாக ராம்ஜி மேலும் கூறினார்.
      குறைந்தபட்சமாக 25,000 வெள்ளி காப்புறுதி தொகையை உள்ளடக்கிய  இத்திட்டம்  மரணமடையும்  அல்லது நிரந்தர உடல் செயலிழப்புக்கு உள்ளாகுவோர் இந்நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய  தொகையைச் செலுத்தும் என்று இச்செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட இக்காப்புறுதி நிறுவனத்தின் வட்டார நிர்வாகி மாணிக்கம் எலன் தெரிவித்தார்.
      வட்டி பிரச்சினையில்  சிக்கித் தவிப்போர் 03-77325503/ 03-77325502 எனும் எண்ணில் சாஸ்தா அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளலாம்.