கோலாலம்பூர், ஜன.19-
தன்னை ஓர் இசையமைப்பாளராக உலகத்திற்கு அடையாளம் காட்டியது மலேசியாதான் என்று மனம் நெகிழ்கிறார் தென்னிந்திய திரைப்பட முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ்.

மலேசிய மக்கள் தனது பாடல்களை ரசித்து மகிழ்ந்த விதம் தனக்குத் தனி உத்வேகத்தை ஏற்படுத்தியதாகவும் இதுவே இன்று தான் இந்த அளவுக்கு உயரக் காரணம் என்றும் அவர் கூறினார்.

தவிர, மலேசிய கலைஞர்களின் திறமையும் அதிர வைக்கிறது என்று  வரும் சனிக்கிழமை தலைநகரில் நடைபெறவிருக்கும் “ஹார்ட் ஆஃப் ஹாரிஸ்’ இசை நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்.

நவீன இசையமைப்பின் நாயகனாகத் திகழும் ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் “ஹார்ட் ஆஃப் ஹாரிஸ்’ இசை நிகழ்ச்சி வரும் 21 ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு , புக்கிட் ஜாலில், அசியாத்தா அரங்கில் நடைபெறவிருக்கிறது.

“நான்  இசையுலகில் முத்திரை பதிக்கக் காரணமானவர்கள் மலேசிய மக்கள். இவர்களின் அன்புக்குப் பிரதிபலனாக இந்நிகழ்ச்சி வழி நல்லதோர் இசை விருந்தைக் கொடுக்க விரும்புகிறேன்.இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த டத்தோ மாலிக் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ஹாரிஸ் ஜெயராஜ்.

மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் ஏற்பாட்டிலான இந்த இசை நிகழ்ச்சியில் ஹரிசரண், பென்னி தயாள்,கார்த்திக், ஆண்ரியா, சைந்தவி போன்ற பிரபல  பின்னணி  பாடகர்களோடு 14 பேர் பங்கேற்கவிருக்கின்றனர். மலேசிய ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மொத்தம் 39 பாடல்களை இவர்கள் பாடவிருப்பதாக அறியப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தங்களின் விருப்பப் பாடல்களாக தொடக்கத்தில் 98 பாடல்களை ரசிகர்கள் தேர்வு செய்தனர். இவ்வளவு பாடல்களையும் இடம் பெறச் செய்ய முடியாது என்பதால் இப்பட்டியலைத் தாங்கள் 39 ஆகக் குறைத்ததாக அவர் தெரிவித்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ்ஜின் விறுவிறுப்பான மற்றும் வித்தியாசமான இசையில் மலரும் இந்நிகழ்ச்சியில் மலேசிய இசை ஜாம்பவான்களான எம்எஸ் ஜெஸ், டார்கி, அர்விந்த் ராஜ், டிஜே ஜெய், டிஜே தாஸ் போன்ற உள்ளூர் கலைஞர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தோற்றுனர் டத்தோ மாலிக் விவரித்தார்.