கோலாலம்பூர், ஜன.19
ஆரம்பப் பள்ளி காலத்தில் மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் இன்று தன்னை ஒரு நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக உருவாக்கியிருப்பதாகக் கூறுகிறார் வளர்ந்து வரும் உள்ளூர் திரைப்பட இயக்குநரான விக்னேஷ் பிரபு.

9 வயதாக இருக்கும்போது பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆசிரியை திருமதி ஆனந்தி தந்த ஊக்குவிப்பினால் இராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் என சிறு சிறு வேடங்களில் நடித்தது மற்றும் பாட்டுப் பாடியது தனது கலைப் பயணத்திற்கு அச்சாரமாக அமைந்ததாகக் கூறுகிறார் இவர்.

“அப்பா ஒரு பேராசிரியர். நாவலாசிரியரும் கூட. இவரின் தமிழ்ப் புலமை தமிழ் மொழி மீதான எனது ஆர்வத்தைத் தூண்டியது. இவரின் புத்தகங்களை அதிகம் படிப்பேன். அப்பா கொடுத்த ஊக்குவிப்பின் பேரில் 13 வயதிலேயே பத்திரிகைகளுக்கு கதை, கவிதைகளை எழுதி அனுப்பினேன். இதன் பலனாக தேசிய நிலையிலான சிறுகதைப் போட்டியில் 3ஆவது நிலையிலும், பின்னர் முதல் நிலையிலும் வெற்றி பெற்றேன்”.

இதனையடுத்து, எஸ்.டி.பி.எம் படிக்கும்போது மாவட்ட ரீதியில் இடைநிலைப் பள்ளிகளுக்கான மேடை, நாடகப் போட்டியில் ஆஞ்சநேயர் வேடத்தில் நடித்தேன்.. இதில் முதல் பரிசை எங்கள் குழு வென்றது. சிறந்த இயக்குனர் மர்றும் சிறந்த படைப்பாளர் ஆகிய விருதுகளை நாங்கள் தட்டிச் சென்றோம்.

இதன் அடிப்படையில் 2011ஆம் ஆண்டில் உள்ளூர் தமிழ் நாடகத் துறையில் காலடி எடுத்து வைத்தேன். பிரபல இயக்குநர் விஜயசிங்கத்தின் ‘உயிரோவியம்’ நாடகத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மூத்த இயக்குநர்களான பிரான்சிஸ் செல்வன், திவாகர் சுப்பையா ஆகியோரும் எனக்குத் தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினர்.

இதற்கிடையே, தலைநகரில் ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டிருந்த காலத்தில் நாடகங்களுக்குக் கதை எழுதுதல், துணை இயக்குநர், கதாநாயகன் போன்ற வாய்ப்புகளும் தன்னைத் தேடி வந்ததாக விக்னேஷ் பிரபு விவரித்தார்.

சிறந்த இயக்குநராக வேண்டும் என்ற மன உறுதியோடு அதற்கான பயிற்சிகளை முறையாக மேற்கொண்டதாகவும் கூறினார்.

இவரின் இயக்கத்திலான ‘சாதுர்யம், பரமபதம், “நான்காவது தியேட்டர்’ முதலிய தயாரிப்புகள் மலேசிய சினிமாவில் இவர் கால் பதிப்பதற்கு சான்றாக அமைந்துள்ளன.

அதே வேளையில், இவரின் இயக்கத்திலான இரு திரைப்படங்கள் வெளிநாட்டில் விரைவில் வெளியீடு காணவிருக்கின்றன..

2021-2022 ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் & சிறந்த படைப்பாளர் விருதை தனது சகோதரர் தனேஷ் பிரபுவுடன் இணைந்து பெற்ற பெருமையும் இவரையேச் சாரும்.

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் விக்னேஷ் பிரபு சினிமா துறையில் சாதனைகள் பல படைக்க அநேகன் வாழ்த்துகிறது.