புத்ரா ஜெயா செப் 14-
நாட்டில் உள்ள இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் வேலை செய்ய 7,500 அந்நிய தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ளும் நடைமுறைகள் தொடர்பில் அடுத்த வாரத்தில் உள்துறை அமைச்சுகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.
உள்துறை அமைச்சுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள விண்ணப்பங்கள் அறிவிக்கப்படும்.
அதன் பிறகு முடித்திருத்தும் நிலையங்கள் நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் முறைப்படி அந்நிய தொழிலாளர்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று இன்று புத்ரா ஜெயாவில் கட்டாய தொழிலாளர் ஒழிப்பு வழிகாட்டி கையேட்டை வெளியிட்ட பிறகு நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.
14 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு நாட்டில் உள்ள இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் அந்நிய தொழிலாளர் வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மனிதவள அமைச்சர் சிவகுமார் மேற்கொண்ட தொடர் முயற்சியால் இப்போது அந்நியத் தொழிலாளர்கள் விவகாரத்திற்கு விடிவுகாலம் பிறந்துள்ளதுள்ளதால் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளைச் சேர்ந்த இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.