30 மாணவர்களுக்கு மருத்துவ வாய்ப்பு மறுப்பு:உயர்கல்வி அமைச்சு உடனடியாகத் தலையிட வேண்டும்!டத்தோ நெல்சன் வேண்டுகோள்

28

கோலாலம்பூர், செப்.14-

மெட்ரிகுலேஷனில் சிறப்புத் தேர்ச்சி பெற்றும் 30 இந்திய மாணவர்களுக்கு பொது பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில்வதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன் என்று மஇ கா கல்வி குழு தலைவர் செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் வினவினார்.

இந்த மாணவர்கள்  மருத்துவம் பயில்வதற்கான 4 ஃபிலெட் எனப்படும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆனால்,  இவர்கள் விண்ணப்பித்த துறை கிடைக்காமல் மருத்துவ உயிரியல் அறிவியல் துறை கிடைத்துள்ளது எவ்விதத்தில் நியாயம் என்றார் நெல்சன்.

“பாதிக்கப்பட்ட இந்த மாணவர்கள் மருத்துவம் பயில்வதற்கான முழு தகுதியைக் கொண்டுள்ளனர். அப்படி இருந்தும் இவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை சிறு வயதில் இருந்தே மனதில் தேக்கி வைத்து அதற்காக கடுமையாகப் பாடுபட்டுள்ளனர்”.

மருத்துவம் பயிலத் தகுதியிருந்தும் தாங்கள் விரும்பிய இத்துறையில் வாய்ப்பு கிடைக்காதது இம்மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. இதன் பொருட்டு இவர்களுக்கான அரசாங்க பல்கலைக்கழக வாய்ப்பு குறித்து இம்மாதம் 16 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உயர்கல்வி அமைச்சை அவர் கேட்டுக் கொண்டார்.

இல்லையேல்,  மாற்று ஏற்பாடாக தனியார் பல்கலைக்கழகங்களில் உதவி தொகை அல்லது உபகாரச் சம்பளம் வழங்கி இவர்கள் மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த  வேண்டும் என்று மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சார்பில் அவர் கோரிக்கை விடுத்தார்.

“இந்த 30 மாணவர்களில் பி40 பிரிவைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.ஆண்டுதோறும் தாங்கள் விரும்பிய துறையில் மேற்கல்வி தொடர்வதற்கு இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இவ்விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சு கவனம் செலுத்தி தாங்கள் விரும்பிய துறையில் மாணவர்கள் மேற்கல்வி தொடர்வதை உறுதிபடுத்த வேண்டும்” என்றார் நெல்சன்.