புத்ரா ஜெயா செப்.14-
தனது அமைச்சின் தொழிலாளர் துறை (JTKSM) இவ்வாண்டு ஜனவரி 1 ஆம் தேதி தொடங்கி பல்வேறு குற்றங்களுக்காக272 முதலாளிமார்களுக்கு எதிராக 2.17 மில்லியன் வெள்ளி அபராத்தை விதித்துள்ளதாக மனிதவ அமைச்சர் வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.
கட்டாய உழைப்பு உட்பட தங்கள் ஊழியர்களின் நலனைக் கவனிக்கத் தவறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தவிர்த்து மனிதவள அமைச்சின் தொழிலாளர் துறை முதலாளிமார்களுக்கு எதிராக 1,321 விசாரணை ஆவணங்களைத் திறந்துள்ளது என்றார் அவர்.
“சட்டவிரோத ஊதியக் குறைப்பு, வேலை ஒப்பந்தங்கள் மற்றும் ஊதியத்தை வழங்கத் தவறியது, வேலை வாய்ப்புச் சட்டம் 1955 இன் கீழ் கூடுதல் நேர வேலைக்கான கொடுப்பனவுகளை வழங்கத் தவறியது மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்கத் தவறியது ஆகியவை கண்டறியப்பட்ட இந்த குற்றங்களில் அடங்கும் என்று மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர்களை எதிர்த்துப் போராடும் வழிகாட்டி கையேட்டை வெளியிட்டபோது அமைச்சர் சிவகுமார் இதனைத் தெரிவித்தார்.
மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர் உழைப்பு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
“உலகளாவிய ரீதியில் 25 மில்லியன் மக்கள் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் ஒவ்வொரு நாடும் இந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு முக்கியப் பங்காற்றுவதாகவும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
கட்டாயத் தொழிலாளர் பிரச்சினை மிகவும் கொடுமையானது என்பதை நாங்கள் அறிவோம். ஆகையால், இதை அடியோடு ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.