spot_img
10.6 C
London
spot_img
Home சிறப்புச் செய்திகள் மக்கள் நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் உன்னத தலைவர் அமரர் துன் சாமிவேலு!

மக்கள் நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் உன்னத தலைவர் அமரர் துன் சாமிவேலு!

0
282

கோலாலம்பூர், செப்.15-

கம்பீர பேச்சு, ஆளுமைத் திறன், உலக அரசியல்  அரங்கில்  மலேசியாவைத் திரும்பிப் பார்க்க வைத்த தலைவர் , சொகுசான பயணத்திற்கு நேர்த்தியான  நெடுஞ்சாலைகள், இரட்டை கட்டடங்களுடன் கம்பீர தோற்றம் கண்டுள்ள தமிழ்ப்பள்ளிகள், மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி, மருத்துவம் பயில  ஏய்ம்ஸ்ட்  பல்கலைக் கழகம் என இன்னும் அடுக்கடுக்கான சாதனைகளைப் படைத்து மறைந்தவர்தான் முன்னாள் மஇகா தேசிய தலைவர் நினைவில் வாழும் துன் டாக்டர் ச. சாமிவேலு.  

இவர் மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு பெறுகிறது. கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தமது 86 ஆவது வயதில் இவர் காலமானார். இவரின் மறைவு செய்தி கேட்டு தலைநகர் , ஜாலான் வேதவனத்தில் உள்ள இவரின் இல்லத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் கடல் அலையெனத் திரண்டனர்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் வேறுபாடு கருதாது அனைத்து கட்சிகளின் தலைவர்கள், உலக தலைவர்கள் ,  அரசு மற்றும் தனியார் துறைகளின் உயரதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள், கல்விமான்கள் , பொது மக்கள் என அணி திரண்டது இந்த உன்னத தலைவர் மீது இவர்கள் கொண்ட மரியாதைக்குச் சான்றாக அமைந்தது.

கடந்த 1970 ஆம் ஆண்டில் அரசியலில் கால் பதித்த துன் சாமிவேலு நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் சுங்கை சிப்புட்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.31 ஆண்டுகள் மஇகா தேசிய தலைவராகப் பொறுப்பேற்றிருந்த இவர் பொதுப்பணி அமைச்சராக 19 ஆண்டுகள் பொறுப்பேற்றிருந்தார். இக்கால கட்டத்தில்தான்  ‘ டோல் சாமி ‘ என்று மற்ற இனத்தவர்கள்  இவரை அழைக்கும்  அளவுக்கு  நாட்டில்  நேர்த்தியான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார சிக்கல் காரணமாக மேற்கல்வி தொடர்வதில் பிரச்னையை எதிர்நோக்கிய மாணவர்களுக்கு மஇகாவின் கல்வி கரமான மாஜூ கூட்டுறவு மேம்பாட்டு கழகம் வாயிலாக கல்வி கடனுதவியை வழங்கினார். நாட்டில் இன்று ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மருத்துவர்களாகவும், சட்ட மற்றும்  தொழில்நுட்ப  வல்லுநர்களாகவும், மற்ற துறைகளில் நிபுணர்களாகவும் திகழ்கின்றனர் என்றால் அதற்குப் பின்னணியில் இருந்தவர் துன் சாமிவேலு என்பதை மறுக்கலாகாது.

அடுத்து, கல்வியில் பிந்தங்கிய மாணவர்களையும் இவர் கைவிடவில்லை. சிரம்பான், டேஃப் கல்லூரி மூலம் இவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கி இவர்களின் வளமான வாழ்க்கைக்கு வித்திட்டார்.

தமிழ்ப்பள்ளிகள் மீது கொண்ட பற்று காரணமாக பல பள்ளிகளை   இணைக் கட்டடங்களுடன் புதுத் தோற்றம்  காணச் செய்தார். தமிழ்ப்பள்ளிகள் மீது  மக்களுக்கு நம்பிக்கையும் தனி மரியாதையும் ஏற்படுவதற்கு இப்புதுத் தோற்றமும் காரணமாக அமைந்தது என்றால் மிகையாகா.

தமது துணைவியார் தோ புவான் இந்திராணி வழி நடத்திய தமிழ் நேசன் நாளேட்டின் வாயிலாக 100க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு  கொடுத்து அவர்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு துணை நின்ற பெருமையும் இவரையேச் சாரும்.

தனது கல்வி முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி அரசியல் குருவாகவும்  இருந்து தன்னை வழிநடத்தியவர் அமரர் துன் சாமிவேலு ஆவார் என்று  நன்றி பெருக்கக் கூறுகிறார் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்.

தான் கல்வி கற்று முன்னேறவும், அரசியலில் பிரவேசிக்கவும் தனக்கு அனைத்து வகையிலும் உறுதுணை புரிந்தவர் அமரர் துன் சாமிவேலு என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் நன்றி பாராட்டினார்.

இவ்வண்ணம் அரசியல், கல்வி, பொருளாதாரம் என இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக தமது வாழ்நாளின் பெரும் பகுதியைச்  செலவிட்ட உன்னத தலைவர் அமரர் துன் சாமிவேலு ஆவார். 

29 ஆண்டுகள் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரே ஓர்  இந்திய அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றிருந்த துன் சாமிவேலு அவர்களின்  நினைவுகளும் புகழும் மக்கள் மனதில் என்றும் பசுமையாக  நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.