மலேசிய தினத்தில் மறுமலர்ச்சிக்குப் புத்துயிரூட்டுவோம்! – சார்லஸ் சந்தியாகோ

93

கிள்ளான், செப்.16-

இன்று மலேசிய தினம். ஆனால், நாம் நமது மறுமலர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்  உள்ளோம்.தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பின்தங்கியிருப்பதோடு  நாட்டில் ஜனநாயக நடைமுறை கடைபிடிக்கப்படுவது படிப்படையாகக்  குறைந்து வருகிறது.

துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட்  ஹமிடிக்கு எதிரான அனைத்து 47 குற்றச்சாட்டுகளில் இருந்து  சட்டத்துறை அலுவலகம்  அவரை விடுவித்த  தாக்கத்தில் இருந்து  மக்கள் எப்படி அவ்வளவு சீக்கிரத்தில் விடுபட்டிருப்பார்கள்? இதற்காக  சட்டத்துறை கூறிய 11 காரணங்களை எப்படி ஏற்றுக் கொள்வது?இது பொது மக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால்  ஜாஹிட்டின் வழக்கறிஞர்கள் 200 பக்கங்கள் அடங்கிய அறிக்கையைத் தாக்கல் செய்யாதது ஏன்?

இத்தகைய அநீதியான  தீர்ப்பில் இருந்து நாம் மீட்சி பெறுவதற்கு முன்பு மேல் முறையீட்டு மனுவை இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கத் தவறியதற்காக முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் மற்றும் 1எம்டிபி  முன்னாள் தலைமை செயல்முறை அதிகாரி அருள் கந்தா கந்தசாமி குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

 இது தவிர்த்து, 1எம்டிபி தொடர்பான வழக்கில் சட்டத்துறை அலுவலகத்தின் அறிக்கையை நஜீப் சிதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பில் யாரும் குற்றஞ்சாட்டப்படாத நிலையில் இதில் அலட்சியம் காட்டப்பட்டதா அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பக்காத்தான்  ஹராப்பான் தலைமையிலான அரசாங்கத்தின் மறுமலர்ச்சி திட்டங்கள் குறித்து கருத்துரைத்த  எனது நண்பர்  நிந்தனை சட்டம், அச்சு மற்றும் வெளியீட்டு உரிமை, சொஸ்மா மற்றும்  அதிகாரப்பூர்வ ரகசிய பாதுகாப்பு சட்டம்  ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வது குறித்து வலியுறுத்தினார். 

அதிகாரத்தில் இருப்போர் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதாக  விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தில் மகஜர் ஒப்படைப்பதற்காக வந்த விவசாயிகள் மற்றும் பார்டி சோசலிஸ்ட் மலேசியா ஆதரவாளர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன்?  இதுதான் மறுமலர்ச்சியா என்று அவர் வினவினார்.

 பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்  25 ஆண்டுகளுக்கு முன்பு பதவி துஷ்பிரயோகம் மற்றும் ஊழலுக்கு எதிராகப் போராடினார்.துணைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர் மீது  பல அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டன. சிறையில் தாக்கப்பட்டார், எனினும்,  தனது கொள்கைகளில் இருந்து இவர்  அறவே பின்வாங்கவில்லை.

நம்பகதன்மை மற்றும்  நேர்மையான அரசாங்கத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்களைத் திரட்டும்  ஆற்றலைக் கொண்ட அன்வாரின் மறுமலர்ச்சியைக் காண விரும்புகிறேன். 

” அனைவருக்கும்  மலேசிய தின வாழ்த்துகள்”

– சார்லஸ் சந்தியாகோ

முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்