பிந்தாங் மின்னல் 2023 :முதல் நிலை வெற்றியாளராக வெ.10,000 தட்டிச் சென்றார் நிர்மலன்!

60

கோலாலம்பூர், செப்.23-

 அங்காசாபுரி, ஸ்டூடியோ எம் 1 கோத்தா மீடியாவில் இன்று நடைபெற்ற பிந்தாங் மின்னல் 2023 இறுதிச் சுற்றில்  முதல் நிலையில்  வெற்றி பெற்று  10,000 வெள்ளி பரிசைத் தட்டிச்  சென்றார்  நிர்மலன் கங்காதரன் .

 அங்காசாபுரி, ஸ்டூடியோ எம்1 கோத்தா மீடியாவில் இன்று நடைபெற்ற பிந்தாங் மின்னல் போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கேற்ற அறுவரில் மலாக்காவைச் சேர்ந்த நிர்மலன் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.

அதே வேளையில் இரண்டாம் நிலை வெற்றியாளராக ராஜஸ்ரீ  7,000 வெள்ளியையும்   மூன்றாம் நிலை வெற்றியாளராக ஸ்வேதா நாயர்  5,000 வெள்ளியையும்  வென்றனர்.

 நீதிபதிகளின் சிறப்புத் தேர்வாக  தலைநகர், செராஸைச் சேர்ந்த  பரத் நாயர்  தேர்ந்தெடுக்கப்பட்டு  3,000 வெள்ளி பரிசை வென்றார்.

இந்த நால்வரும் பரிசு தொகை, கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றைப் பெற்றனர். ஸ்ருதி, ஜீவா இருவரும் ஆறுதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு   கேடயம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன.

சிறப்பு வருகையாளர்களாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்டிஎம் தலைமை இயக்குநர் டத்தோ சுஹைமி சுலைமான், வானொலி பிரிவு இயக்குநர் சைஃபுஜாமான் யூசோப் ஆகிய இருவர் வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

கலைஞர்களின் கண்கவர் நடனங்கள் , பாடல்கள், மின்னல் எஃப்எம் வரலாற்றுத் தொகுப்பின் காணொளி என பல சுவையான அங்கங்களுடன் தெய்வீகன் தாமரைச் செல்வன், ரவீன் மற்றும் புவனா வீரமோகன் ஆகியோரின் விறுவிறுப்பான அறிவிப்பில் மலர்ந்த பிந்தாங் மின்னல் 2023 இறுதிச் சுற்று  நேயர்கள் பயனடையும் வகையில் முகநூலில் நேரடி அஞ்சல் செய்யப்பட்டது.

இந்த இறுதிச் சுற்றின் நீதிபதிகளாக சந்தேஷ், ஷமேஷன் மணிமாறன் மற்றும் தாரணி குமார் பணியாற்றினர்.

பிந்தாங் மின்னல் நிகழ்ச்சி வாயிலாக நல்ல கலைஞர்களை மின்னல் எஃப்எம் உருவாக்கியிருப்பது மனநிறைவும் பெருமையும் அளிப்பதாகக் கூறினார்  இதன் நிர்வாகியான திருமதி ரோகிணி சுப்ரமணியம்.

மின்னல் எஃப்எம்  நடத்திய  இவ்வாண்டுக்கான பிந்தாங் மின்னல் போட்டியில் 250 பேர் டிக் டோக் வழி கலந்து கொண்டனர். இவர்களில் 12 பேர் அரையிறுதி சுற்றுக்குத் தேர்வாயினர். ஆகஸ்டு 5 ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதி சுற்றில் அறுவர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு பெற்றனர்.