மித்ராவின் புதிய இலக்கு இந்திய சமூகத்தின் மேன்மைக்கு வித்திட்டுள்ளது! -டாக்டர் குணராஜ்

43

கிள்ளான், செப்.24-

மலேசிய இந்திய சமூக உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு  2023 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 10 கோடி வெள்ளி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்திய சமூகத்தின் தேவையை மித்ரா  வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதையே இது காட்டுகிறது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மித்ரா அமைக்கப்பட்டது முதல்  தனது ஒதுக்கீட்டை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்று மித்ரா சிறப்பு செயற்குழு குழு தலைவர் டத்தோ ஆர்.ரமணன்  அண்மையில் கூறியிருந்ததை டாக்டர் குணராஜ் சுட்டிக் காட்டினார்.

அதே சமயம், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அடிப்படையில் 2023 பட்ஜெட்டில் மித்ராவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட  10 கோடி வெள்ளி செப்டம்பர் மாதம் வரை முழுமையாகப்  பயன்படுத்தப்பட்டுவிட்டதாக  பிகேஆர் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில்  10,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா 2,000 வெள்ளி, பாலர்ப்பள்ளி நடத்துனர்கள், டைலசிஸ் நோயாளிகள் போன்றோருக்கு  நிதியிதவியை வழங்கவிருப்பது இந்திய சமூக மேன்மைக்கு இது ஆற்றும் பங்கையே பறைசாற்றுகிறது என்றார் குணராஜ்.

“அரசாங்கத்தின் நிதி பயனான திட்டங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், 2024 பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்காக கூடுதல் நிதியை  ஒதுக்கீடு செய்யும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம்  கோரலாம்” என்றார் குணராஜ்.

ரமணன் தலைமையில் மித்ரா புதுத் தோற்றம் கண்டு அதன் இலக்கை நோக்கி வெற்றிகரமாகப் பயணித்து  வருகிறது என்று  அவர் பாராட்டினார்.