கோலாலம்பூர், செப்.28-
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களின் முறையான விளக்கத்தை ஏற்று நாளை நடைபெறத் திட்டமிடப்பட்ட அமைதி பேரணியை ம.இ.கா ரத்து செய்வதாகத் தெரிவிக்க[ப்பட்டது.
தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி அவர்கள் சனாதனம் குறித்துப் பேசிய ஒரு பேச்சு சர்ச்சையை உருவாக்கியிருப்பதாகச் சில நண்பர்களும் சில அமைப்புகளும் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். யார் மனமும் புண்படக்கூடாது என்பதற்காக ம.இ.கா அதை மிகுந்த கவனத்தோடு பரிசீலித்தது.
எந்த சமயக் கருத்தும் யாரையும் காயப்படுத்திவிடக் கூடாது என்பதில் ம.இ.கா தெளிவான கொள்கையோடு நடைபோடுகிறது.
அதனால் அமைச்சர் உதயநிதி பேசிய கருத்து குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டது.
“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு” என்ற வள்ளுவப் பேராசான் வாய்மொழிப்படி ம.இ.கா இதன் உண்மைத் தன்மையை ஆழ்ந்து ஆராய்ந்த்து. அவர் சனாதனம் குறித்துச் சொன்ன கருத்து சமயத்தைச் சார்ந்ததா அல்லது சனாதனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத் தாழ்வுகளைச் சார்ந்ததா என்ற பொருள் கவனத்தில் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் மாண்புமிகு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் விளக்கம் எனது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அதில் சில விளக்கங்களை முன்வைத்திருக்கிறது. அந்த விளக்கத்தின் அடிப்படையில் ம.இ.கா சில தெளிவுகளைப் பெற்றிருக்கிறது.
அமைச்சர் உதயநிதியின் கருத்து இந்து சமயத்தைக் குறித்ததல்ல. இந்து சமயத்தை முன்னிறுத்திச் சில பழைமைவாதிகள் ஏற்படுத்திய சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்தது. பிறப்பினால் உண்டாக்கப்படும் ஜாதி வேற்றுமை சார்ந்தது என்று அந்தக் கடிதம்தெள்ளத் தெளிவாக உள்ளம் திறந்து பேசியிருக்கிறது.
அந்த கடித விளக்கம் ம.இ.காவின் எதிர் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறது.
இந்தியா, குறிப்பாகத் தமிழ்நாட்டின் அரசியல் இயக்கங்களோடும் ம.இ.கா உறவுப் போக்கைக் கடைப்பிடிக்க விரும்புகிறதே தவிர, உரசல் போக்கை அல்ல. கடல் நம் நிலப்பரப்பைத் துண்டித்தாலும் தமிழ் நம் மனப் பரப்பைத் துண்டிக்காது என்று நம்புகிறவர்கள் நாம். மேலும் சனாதான தர்மத்தை அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது என்பதில் ம.இ.கா உறுதியாக உள்ளது.
எனவே இந்தச் சர்ச்சையை உள்ளூர் அரசியல் என்ற பார்வையில் பார்ப்பதே சாலச் சிறந்தது என்று நாம் கருதுகிறோம். ஆனால், எதிர்காலத்தில் இப்படி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகளை எந்த அரசியல் தலைவரும் வெளியிடாமல் இருப்பதே சாலச் சிறந்தது என்று இங்கிருக்கும் இந்தியச் சமூகம் கருதுகிறது.
அமைச்சர் உதயநிதியின் பேச்சு, சமயம் குறித்தல்ல,சாதி குறித்தது என்ற விளக்கத்தினாலும் – எந்த வெளிநாட்டு அரசியலிலும் ம.இ.கா தலையிடாது என்ற நித்திய நிலைப்பாட்டினாலும் – மலேசியாவில் இந்தக் கருத்துக்களால் காயப்பட்டிருப்பதாய்க் கருதும் சில மலேசிய இந்தியர்களின் உள்ளம் ஆர்ப்பாட்டமின்றி அமைதியுற வேண்டும் என்பதாலும் – இந்தியத் தொப்பூழ்க் கொடி உறவுகளோடு நம் உறவுகள் தொடரவேண்டும் என்ற தூய எண்ணத்தினாலும் ம.இ.கா இதை மென்மையாகக் கையாள விரும்புகிறது.
எனவே, தமிழ்நாட்டு உறவுநிலை கருதி இந்தப் பிரச்சினையைக் கடந்துபோக வேண்டுமென்று ம.இ.கா முடிவெடுக்கிறது.
இந்தக் கடிதத்தையும் விளக்கத்தையும் ஏற்று சம்பந்தப்பட்ட அமைப்புகளும் தமிழர்களும் அமைதி கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
-டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
மஇகா தேசிய தலைவர்




