சுபாங் ஜெயா, நவ.2-
மலேசிய இந்தியர் போ உருமாற்றுப் பிரிவு (மித்ரா)வசதி குறைந்த இந்திய இளைஞர்கள் மின்சார தானியங்கி மேம்பாட்டு பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் 2.875 மில்லியன் வெள்ளி மதிப்பில் 250 இந்திய இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
இவர்கள் கோலாலம்பூர் (50 பேர்), சிலாங்கூர் (50 பேர்), பினாங்கு (100 பேர்) மற்றும் ஜோகூர் (50 பேர்) ஆகிய 4 இடங்களில் இப்பயிற்சியை மேற்கொள்வர் என்று மித்ரா தலைமை இயக்குநர் ரவீந்திரன் நாயர் தெரிவித்தார்.
“இத்துறையில் பயிற்சி மேற்கொள்ள இயலாத இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பை மித்ரா வழங்கியுள்ளது. எஸ்ஜி எடுகேஷன் குரூப் வாயிலாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை முடித்த பின்னர் இவர்கள் மாதம் 3,000 வெள்ளிக்கு மேல் வருமானமாக ஈட்டலாம்” என்று இங்குள்ள தொழிற்பேட்டைப் பகுதியில் மின்சார தானியங்கி மேம்பாட்டு பயிற்சி தொடக்க விழாவில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
மின்சார தொழில்நுட்பத்தை உட்படுத்தும் தானியங்கி தொழிற் துறையில் இந்திய இளைஞர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு மித்ரா மின்சார தானியங்கி மேம்பாட்டு பயிற்சியை இவர்களுக்காகத் தொடக்கியிருப்பதாக இதன் சிறப்பு செயற்குழு தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

“குறைவான கரியமிலவாயுவைப் பயன்படுத்தும் இலக்கை அடைவதற்கு மாற்று வழியாக மின்சார வாகனம் உருவாகியுள்ளது. இதன் அடிப்படையில் மின்சார வாகன பயிற்சி திட்டத்தை தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து,ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளன” என்று இங்குள்ள ஆட்டோரோனிக்ஸ் வாகன பயிற்சி மையத்தில் மின்சார தானியங்கி மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
“இந்த மின்சார தானியங்கி மேம்பாட்டு பயிற்சி திட்டம் இந்திய இளைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நிச்சயம் துணை புரியும். இதன் பொருட்டு உலக தொழில்நுட்ப மாற்றத்திற்கேற்ப இளைஞர்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் ” என்றார்.
இளைஞர்களுக்கு மின்சார தானியங்கி மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை வழங்கி வரும் எஸ்ஜி எடுகேஷன் குரூப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர் மலேசியாவில் தொழிற்பயிற்சி திட்டங்கள் தொடர்வதற்கு மித்ராவிற்கும் எஸ்ஜி எடுகேஷன் குரூப்பிற்குமிடையிலான உறவு தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இப்பயிற்சியில் மற்ற இன இளைஞர்களும் பயனடையும் வகையில் இதனை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்து பிரதமரிடம் தாம் கலந்தாலோசனை நடத்தவிருப்பதாகவும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் விவரித்தார்.
இதனிடையே, மின்சாரம், தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகன ஒருங்கிணைப்பு முறை போன்றவற்றை உள்ளடக்கிய பல்வேறு தொழிற்துறைகள் தற்போது துரித மேம்பாடு கண்டு வருகின்றன.இந்தத் தொழிற்துறைக்குத் தேவையான ஆற்றலைக் கொண்டிருப்பதற்கு இளைஞர்களைத் தயார்படுத்துவதே இப்பயிற்சி திட்டத்தின் நோக்கம் என்று எஸ்ஜி எடுகேஷன் குரூப் தலைமை நிர்வாக இயக்குநர் டத்தோ ஸ்ரீகணேஷ் குறிப்பிட்டார்.




