உதவி தொகை பாக்கெட் சமையல் எண்ணெய்யை அமைச்சு ஆய்வு செய்து வருகிறது -புஸியா சாலே

31

கங்கார், நவ.18-

சந்தைகளில் கையிருப்புப் பற்றாக்குறை ஏற்படும் அளவிற்குப் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யைச் சில தரப்பினர் உதவி தொகை பாக்கெட் சமையல் எண்ணெய்யாக விற்பது குறித்து உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினங்களுக்கான அமைச்சு ஆராய்ந்து வருவதாகத் துணை அமைச்சர், புஸியா சாலே தெரிவித்தார்.

இந்த பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் கிலோவுக்கு 3.80 வெள்ளி வரை விற்கப்படும் வேளையில், உதவி தொகை கொண்ட பாக்கெட் சமையல் எண்ணெய் 2.50 வெள்ளிக்கு மட்டுமே விற்கப்படும் போது மோசடி நிகழ்வதற்கான வாய்ப்புக் கிட்டுகிறது.

ஒவ்வொரு மாதமும் உதவி தொகை கொண்ட 60 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய்யை அரசு ஒதுக்குகிறது. அது உண்மையில் 5,800,000 குடும்பங்கள் அடங்கிய பி40, எம்40 மக்களுக்குப் போதுமானதாக இருக்க வேண்டும்.

பொதுவாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதத்திற்கு 4.8 கிலோ சமையல் எண்ணெய் போதுமானது. ஆனால் மைக்ரோ வணிகர்கள் மட்டும் மாதத்திற்கு 400 பாக்கெட் சமையல் எண்ணெய்யைப் பயன்படுத்துகின்றனர்.

முந்தைய காலங்களில் இவர்கள் ஒரே சமையல் எண்ணெய்யைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தியிருக்கலாம். எனினும், பயன்படுத்தப்பட்டச் சமையல் எண்ணெய் இப்போது கிலோவுக்கு 3.80 வெள்ளி வரை கிடைப்பதால் இவர்கள் எண்ணெய்யை மறுசுழற்சிச் செய்ய வேண்டியதில்லை என்று ரஹ்மா விற்பனைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது புஸியா சாலே குறிப்பிட்டார்.

-பெர்னாமா