ஒற்றுமை அரசாங்கத்தில் பதவியைக் கோரமாட்டோம்! மஇகா மீண்டும் வலியுறுத்து

41

செர்டாங், நவ.19-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் மஇகா எந்தவொரு பதவியையும் கோராது என்ற கட்சியின் நிலைப்பாட்டை அதன் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்   மீண்டும் வலியுறுத்தினார்.

அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்ற மாட்சிமை தங்கிய மாமன்னரின் வேண்டுகோளுக்கு இணங்கவும்  நாட்டின்    அரசியல் நிலைத்தன்மைக்காகவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையினான ஒற்றுமை அரசாங்கத்திற்கு மஇகா ஆதரவு வழங்கி வருவதாக விக்னேஸ்வரன் கூறினார்.

“இந்த அரசாங்கத்தில் எங்களுக்கு  மரியாதையும் முக்கியத்துவமும் அளிக்கப்பட வேண்டும். அதற்குரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்” என்று இங்குள்ள மெப்ஸ் அரங்கில் நேற்று  நடைபெற்ற மஇகாவின் 77 ஆவது தேசிய பொதுப் பேரவையை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு  மஇகா வலுப்பெற்ற ஒரு கட்சியாக விரைவில்  பீடுநடை போடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கல்வி ஒன்றே இந்திய சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் என்று மஇகா நம்புவதால் மாணவர்களுக்கு வசதியாக சிலாங்கூரில் ஏய்ம்ஸ்ட் கல்லூரி ஒன்றை அமைக்க கட்சி திட்டமிட்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

“பல்வேறு துறைகளில்  பயிற்சிகளை வழங்கும் இக்கல்லூரி வாயிலாக மேலும் அதிகமான இந்திய மாணவர்கள் பட்டம் பெற்று வளமான ஓர் எதிர்காலத்தைப் பெறலாம்” என்றார்.

மஇகாவின் கல்வி கரமான மாஜு கல்வி மேம்பாட்டு நிறுவனம் (எம்ஐஇடி) வாயிலாக கடனுதவிக்காக வாரந்தோறும் மாணவர்கள்  மஇகா தலைமையகம் வருகின்றனர்.

இந்த மாணவர்கள் தங்கு தடையின்றி தங்கள் கல்வியைத் தொடர்வதற்கு எம்ஐஇடி உதவி புரியும் என்றார்.

இதனிடையே, 1,500க்கும் மேற்பட்ட பேராளர்கள் இந்தப் பொதுப் பேரவையில் கலந்து கொண்டனர்