ஸ்ரீ முருகன் நிலையத்தின் பிரம்மாண்ட அக்னி கார்த்திகை! 1000திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

88

பெட்டாலிங் ஜெயா, நவ.27-

கார்த்திகை மாதத்தில் கிருத்திகா நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது  கார்த்திகை. இந்த  தீபத்தின் வழி நமது உள் ஆற்றலை உணர்ந்து  சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும் எனும்  நோக்கத்தில் ஸ்ரீ முருகன் நிலையம் பிரம்மாண்ட அக்னி கார்த்திகையை வெற்றிகரமாக  நடத்தியது.

இங்குள்ள ஸ்ரீ முருகன் நிலைய தலைமையகத்தில்  நேற்று நடைபெற்ற இந்த அக்னி கார்த்திகையை மனித வள அமைச்சர் வி.சிவகுமார் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

ஆயிரம் அக்னி கார்த்திகை விளக்குகளை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல் தலைவர்கள், வர்த்தக பிரமுகர்கள் என வந்திருந்த அனைவரும் ஏற்றி எங்கும் மகிழ்ச்சி மற்றும் வெற்றியைப்  படரச் செய்தனர்.

இந்தியர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண வேண்டும்.இதற்கு கல்வி மிக முக்கியம். அடுத்து, சமய கல்வி. கட்டொழுங்குமிக்கவராக ஒருவரை உருவாக்குவது சமய கல்வி. இவற்றோடு  தன்னம்பிக்கையும், விடா முயற்சியும்  சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்றார் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய   ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா.

“முன்னேற்றம்  நம் உரிமை” என்ற தலைப்பில் ஸ்ரீ முருகன் நிலைய இணை இயக்குநர் சுரேன் கந்தா ஆற்றிய எழுச்சியுரை மாணவர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும்.

முன்னதாக, ஸ்ரீ முருகன் நிலையத்தின் அக்னி கார்த்திகைக்காக திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறப்பு பூஜை குறித்து ராஜேஸ்வரி விவரித்த வேளையில் இந்நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆ.அசோக் வேலு தலைமையில் இந்நிலையத்தின் வளர்ச்சிக்குப் பக்க பலமாக இருக்கும் இளைஞர் படையினர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

பிரம்மா‌ஸ்திரா  இலவச இணைய தளம் வாயிலாக ஸ்ரீ முருகன் நிலையம்  தமிழ்ப்பள்ளிகளோடு தொடர்பு கொள்வது குறித்து புகனேஸ்வரி விளக்கம் அளித்தார்.

ஸ்ரீ முருகன் நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ்  செவ்வனே வழி நடத்திய அக்னி கார்த்திகை  இந்திய சமூகத்திற்கு புதுத் தெம்பையும் புதிய நம்பிக்கையையும் கொடுத்திருக்கும் என்பது திண்ணம்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் வாயிலாக முருகப் பெருமானின் அக்னி சத்தியையும் ஆசியையும் தன்னால் உணர முடிந்ததாகவும் இது தனக்கும் தனது குடும்பத்திற்கும் மட்டுமின்றி  ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தையும் காக்கும் என்றும்  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களில் ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீ முருகன் நிலையத்தின் அக்னி கார்த்திகை விழாவில் டெலண்ட்  கார்ப் தலைமை செயல்முறை அதிகாரி தோமஸ் மெத்தியூஸ் , டத்தோ டாக்டர் புரவியப்பன், டத்தோ டாக்டர் ஏ.டி.குமரராஜா, பைனரி பல்கலைக்கழகத்தின் உரிமையாளர்  டான் ஸ்ரீ ஜோசப் அடைக்கலம், தேசிய தமிழ்ப்பள்ளி  தலைமையாசிரியர் மன்ற தலைவர் எஸ்.எஸ். பாண்டியன், டாக்டர் ரகு, டாக்டர் தேவிகா,  திருமதி இந்திரா மாணிக்கம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.