பிள்ளைகளை தொழிற்கல்வி பயில ஊக்குவிப்பீர்! அமைச்சர் சிவகுமார்

51

 

பெட்டாலிங் ஜெயா, நவ. 27-

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை  திவேட் எனப்படும் தொழிற்கல்வி  பயில ஊக்குவிக்க வேண்டும் என்று மனித வள அமைச்சர் வி. சிவகுமார் வலியுறுத்தினார்.

கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காத மாணவர்கள் மனம் தளராது ஈராண்டுகள் மட்டுமே உட்படுத்தும்   தொழிற்கல்வி சான்றிதழ் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனை மாணவர்கள் 4ஆம் படிவத்தில் படிக்கும்போதே ஆசிரியர்களும் எடுத்துரைக்கலாம் என்றார்

உயர்கல்வி என்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்ற முக்கியத்துவத்தை தொழிற்கல்வியும் கொண்டுள்ளது. இளைஞர்கள் முறையான தொழிற்பயிற்சியைப் பெறுவார்களேயானால் அவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொண்டு மனநிறைவான ஊதியத்தைப் பெறலாம் என்பதை அமைச்சர் சுட்டிக் காட்டினார். 

“எந்தவொரு பயிற்சியும் இன்றி வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்களைக் காட்டிலும் இந்திய இளைஞர்கள் முறையான தொழிற்கல்வி பெற்று ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறலாம்” என்று இங்கு ஸ்ரீ முருகன் நிலையத்தின் அக்னி கார்த்திகை விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம்  அவர் பேசினார்.