மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை-ஓம்ஸ் அறவாரியம் ஏற்பாட்டில் சிறந்த மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள்!

56

கோலாலம்பூர், நவ.29-

இங்குள்ள மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் பொருட்டு இந்திய ஆய்வியல் துறையும்  ஓம்ஸ் அறவாரியமும்  இணைந்து  தங்கப் பதக்கங்கள் வழங்கி சிறப்பித்தது.

மலாயாப் பல்கலைக்கழகத்தின் 63 ஆவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு இப்பல்கலைக்கழகத்தின் சமூக, அறிவியல், கலைப்புலத்தின் கூலியா ‘ஏ’ மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக  இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இளங்கலை பட்டம் பெற்ற 15 பேர், முதுகலை பட்டம் பெற்ற இருவர் மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஒருவர் என மொத்தம் 18  மாணவர்களுக்கு  ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தங்கப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைக்கு அதிகமான மாணவர்கள் சேர வேண்டும். இவ்வாண்டு கூடுதலாக 13 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். இவ்வெண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 50 ஐ எட்ட வேண்டும் என்று  தங்கப் பதக்க விருது விழாவில் உரை நிகழ்த்திய சமூக, அறிவியல், கலைப்புலத்தின் தலைவர் பேராசிரியர் டத்தோ டாக்டர் டேனி வோங் சீ கேன் தெரிவித்தார்.

” மலாயாப் பல்கலைக்கழகத்தில்  மிகவும் ஆக்கப்பூர்வமான ஒரு துறை இந்திய ஆய்வியல் துறை. அதோடு, நாட்டின் வரலாற்றிலும் முக்கியத்துவம் பெற்ற ஒரு துறையாக இது  திகழ்கிறது. அவ்வகையில்  இந்திய ஆய்வியல் துறை கற்றுக் கொடுத்த வாழ்வியல் நெறிமுறைகளை பட்டம் பெற்ற மாணவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

மாணவர்களின் இன்றைய வெற்றியானது தனிநபர் வெற்றி அல்ல. இதற்குப் பின்னணியில்  பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தியாகங்களும் , அர்ப்பணிப்புகளும் அடங்கியுள்ளன.இவற்றை இவர்கள் மறந்துவிடலாகாது என்றார் டாக்டர் டேனி வோங்.

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின்  சிறந்த மாணவர்களுக்கான  தங்கப் பதக்க விருது விழா கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.அவ்வகையில்  இதுவரை 204 பேருக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டிருப்பதாக இத்துறையின் தலைவர் முனைவர் சிவபாலன் கோவிந்தசாமி கூறினார்.

இப்பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறைக்கு அதிகமான மாணவர்கள் சேர வேண்டும். இதன் வழி மேலும் அதிகமான மாணவர்கள் தங்கப் பதக்கங்களைப் பெற வேண்டும் என்று ஓம்ஸ் பா. தியாகராஜன் வலியுறுத்தினார்.

இவ்விழாவில் தங்கப் பதக்க விருது பெற்ற இளங்கலை பட்டதாரிகள் ம.துர்காஷினி , ச.லோசினி, கோ. அஸ்வினி, க.அஸ்வினி, கா.ஹேமா சங்கரி, க.திவ்யா  தர்ஷினி, ரா.கார்த்திக் ராஜா, வா.புவனேஸ்வரி, ம.சாமளா, அ.நாகேஸ்வரி, இரா.கௌதமி, இரா.அஷ்ணவி, பு.மாதுரி, சு.பிரேமா மற்றும் மோ.ராதா ஆகியோர் ஆவர்.

 முதுகலை பிரிவில்  அ.கார்த்தியாயிணி , வீ.ஷீலா தேவி இருவரும் தங்கப் பதக்கம் பெற்ற வேளையில்  முனைவர் பிரிவில் வினோத் நல்லிசாமி தங்கப் பதக்கம் பெற்றார்.

தங்களின் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களை மாணவர்கள் நினைவு கூர்ந்த அங்கம் நெகிழ்ச்சியுறச் செய்தது.

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்திய ஆய்வியல் துறையின் இணைப் பேராசிரியராக இருந்த முனைவர் குமரன் சுப்ரமணியத்தின் முயற்சியில்  முதன் முதலாக தங்கப் பதக்க  விருது விழா அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.