இந்திய சமூகத் தலைவர்களுக்கு உரிய அங்கீகாரம் தேவை! -ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராயுடு வலியுறுத்து

68

கிள்ளான், நவ.1-

    எந்த நேரத்தில் எந்த அசம்பாவிதம் நடந்தாலும் அந்த இடத்தில் முதலில் நிற்பவர்கள் சமூகத் தலைவர்கள். ஆகையால் இவர்களுக்கு முறையான அங்கீகாரமும் போதிய அலவன்சும் வழங்கப்பட வேண்டும்  என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பா ராயுடு தெரிவித்தார்.

    சாலையில் மரம் விழுதல் , வெள்ளம் போன்ற பல்வேறு பிரச்னைகள் எந்த நேரத்தில் நடந்தாலும் உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கண்காணிக்கக்கூடியவர்கள் சமூகத் தலைவர்கள். இவர்கள் தங்களின் கடமையை மேலும் சிறப்பாகச் செய்ய   இவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

    “முழு  நேர சேவையை வழங்கும் இந்திய சமூக தலைவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அலவன்ஸ் தொகை அதிகரிக்கப்பட வேண்டும். இதன் வழி இவர்கள் மேலும் உற்சாகத்துடன்  தங்கள் கடமையை  ஆற்றலாம்” என்றார்.

    “போதுமான நிதி வளம் இல்லாத காரணத்தினால்  இவர்கள் தங்கள் தொகுதியின் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியை நாட வேண்டியதாக உள்ளது என்று இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் 62 இந்திய சமூக தலைவர்களின் சிறந்த சேவைக்கான அங்கீகாரக் கடிதங்களை வழங்கும் நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

   ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  மாநில மக்களின் நலனுக்காகவும்  கடுமையாகப் பாடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற அர்ப்பணிப்புமிக்கத் தலைவர்களை பின்பற்றி சமூக தலைவர்களும் தங்களின் கடமையை ஆற்ற வேண்டும் என்றார் பாப்பா ராயுடு .

   அடுத்தப் பொதுத் தேர்தல் சவால்மிக்கதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக தலைவர்களின்  சேவையானது அடுத்தப் பொதுத்தேர்தலைச் சந்திப்பதற்குத் துணை புரியும். அடுத்தப்  பொதுத்தேர்தலுக்கு நாம் இப்போது முதல் தயாராக வேண்டும் என்றார்.

    2024-2026ஆம் தவணைக்கான இந்திய சமூகத் தலைவர்களில் 80 விழுக்காட்டுப் பழைய முகங்கள் நிலைநிறுத்தப்படும் வேளையில்  20 விழுக்காட்டுப் புதிய முகங்கள் இடம் பெறுவர் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

  “இவர்கள் அனைவரும் தங்கள் முழு செயல் திட்ட அறிக்கைகளை  என்னிடம் சமர்ப்பிக்க வேண்டும். மக்களின் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு காண வேண்டும் என்பது மிக முக்கியம்.வறுமை ஒழிப்புத் துறைக்கு நான் பொறுப்பேற்றிருக்கிறேன்.  இதன் பொருட்டு  மாநில அரசாங்கத்தின்  உதவி கோரி விண்ணப்பம் செய்திருக்கும்  சிரமப்படும் குடும்பங்களின் முழு பின்னணியையும் இவர்கள் ஆராய்ந்து துல்லிதமான தகவல்களை  என்னிடம் வழங்க வேண்டும் “.

    அதே நேரத்தில் ,இவர்களின் விண்ணப்பம்  அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து 3 மாதங்களில் இவர்களிடம் தெரியப்படுத்தப்படும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

   இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.கணபதி ராவ் சிறப்பு வருகை புரிந்தார்.