பெண்களுக்கான நிதி நிர்வாக பட்டறை! உலு லங்காட் மைபிபிபி ஏற்பாடு

128

காஜாங், பிப்.22-

உலு லங்காட் மைபிபிபி தொகுதியில் உள்ள பெண்கள் பொருளாதார ரீதியில் மேம்பாடு காணும் பொருட்டு பயிற்சி பட்டறை ஒன்று நடத்தப்பட்டது.

இவர்கள் சிறுதொழில் வர்த்தகத்தின் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதே இந்த இலவச பயிற்சியின் நோக்கமாகும்.

அந்த வகையில் சுங்கை சுவா பகுதியில் அமைந்துள்ள மைபிபிபி அலுவலகத்தில் கடந்த 17ஆம் தேதி காலை 9.00 முதல் மாலை 4.30 மணி வரை இப்பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

உலு லங்காட் மைபிபிபி தொகுதித் தலைவர் டாக்டர் எம்.சுரேந்திரன் தலைமையில் மக்களின் நலன் பேணும் நோக்கில் சிறுதொழில் முனைவர்களை உருவாக்கும் நோக்கத்துடன் உலு லங்காட் மைபிபிபி ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 1 நாள் வர்த்தக பட்டறையில் 50 பேர் கலந்து கொண்டு பயனடைந்ததாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோசப் மார்ட்டின் பெர்னாண்டஸ் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் சிறந்த முறையில் பொருளாதார மேம்பாட்டிற்கு பெரிதும் உதவும் நோக்கில் பல்வேறு தலைப்புகளில் தன்முனைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிக்5 எக்ஸிகியூடிவ் நிர்வாகத் துறையைச் சேர்ந்த பயிற்றுனர் கெவின் மைக்கல், வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி விஜய குணசேகரன், ரம்ஜான் ஃபுட்ஸ் தோற்றுநர் ஆர்.யோகானந்தன் ஆகியோர் நிதி நிர்வாகம் சார்ந்த தலைமைத்துவ பயிற்சிகளை சிறந்த முறையில் வழிநடத்தினர்.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இதுபோன்ற பல்வேறு சிறப்பு பயிலரங்குகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர்கள் கூறினர்.

பெண்கள் நல்வாழ்விற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான தொடர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

இப்பட்டறையில் பங்கேற்ற அனைவருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திரன், இதுபோன்ற மற்றுமொரு இளைஞர்-மகளிர்களுக்கான பொருளாதார பட்டறை கூடிய விரைவில் ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. அதற்கான முன்நடவடிக்கைகளைக் கட்சி தற்போது துரிதமாக மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.