தலைநகரில் வீடுகள் இல்லாதோரின் பிரச்சினை: விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்! -என்றி லாய்

94

கோலாலம்பூர், பிப்.23-

நவீன நகராக விளங்கும் கோலாலம்பூரில் வீடுகள் இல்லாத மக்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரச்சினைகளுக்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்), சமூகநல இலாகா (ஜேகேஎம்) பைதுல்மால், தேசிய சமூக நல அறவாரியம் (ஒய்கேஎன்), குடிநுழைவு துறை மற்றும் தேசிய பதிவிலாகா (ஜேபிஎன்) ஆகியவற்றின் கூட்டு திட்டமிடல் அவசியம் என்று கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசனை வாரிய குழு உறுப்பினர் லாய் சென் ஹெங் (என்றி லாய்) கூறினார்.

இதனால் சிரமமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், இதனை இப்படியே விட்டுவிடாது இதற்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும் என்றார்.

” கோலாலம்பூர் என்றாலே அது ஒரு நவீனமய மாநகராகத்தான் நினைவில் இருக்க வேண்டுமே தவிர வீடுகள் இல்லாதோரைக் கொண்ட தலைநகராக அல்ல” என்றார் என்றி லாய்.

” நமது கண் முன்னாலேயே வீடுகள் இல்லாதோரை நாம் பார்க்கிறோம். இது அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால், இதற்குத் தீர்வு காணாவிட்டால் இது மற்ற இடங்களுக்கும் பரவிவிடும்” என்றார்.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் விட்டுவிட்டால் இது கோலாலம்பூரின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிடும் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.

மாநகர் மன்ற ஆலோசனை வாரிய குழுவின் இதர இரு உறுப்பினர்களான கார்மன் லியோங் மற்றும் டாக்டர் பாஷீர் ஆகியோருடன் அண்மையில் மேடான் பாசார் சுற்றுப் பகுதிகளில் வீடில்லாதோரின் பிரச்சினையை நேரில் கண்டறிந்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.