வளமிக்க கோலாலம்பூர் மெது ஓட்டத்தோடு ‘சாப் கோ மே’ கொண்டாட்டம்!

220

கோலாலம்பூர், பிப்.24-

தலைநகர்  புக்கிட் பிந்தாங் பகுதியில் பிரசித்தி பெற்ற நில அடையாளங்கள் வழி உல்லாசமான ஒரு நடைபயணம் நாளை நடைபெறவிருக்கிறது. 2024 ‘சாப் கோ மே’ கொண்டாட்டத்தையொட்டி  மூன்றாவது முறையாக வளமிக்க கோலாலம்பூர் மெது ஓட்டம்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மெது ஓட்டத்தை கோலாலம்பூர் மேயர் டத்தோ கமாருல்சாமான மாட் சாலே  இன்று சனிக்கிழமை மாலை மணி 5.15 க்கு டத்தாரான் மெர்டேக்காவில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைப்பார் என்று இதன் ஏற்பாட்டு குழு தலைவரான ஜேக் லிம் தெரிவித்தார்.

புக்கிட் பிந்தாங் சமூக குழு (என்பிபிசி) பிபிகேஎல்சிசி சுற்றுலா சங்கத்துடன் இணைந்து இந்த நடைபயணத்தை ஏற்பாடு செய்திருப்பதாக இங்குள்ள சுங்கை வாங் பிளாசா நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

“டத்தாரான் மெர்டேக்கா தொடங்கி பாசார் செனி, ரிவர் ஆஃப் லைஃப், ஜிஎம்பிபி சமூக விற்பனை பேரங்காடி மையம்,  பெடரல் ஹோட்டல், லோட் 10, லாவ் யாட் பிளாசா, சுங்கை வாங் பிளாசா, பெர்ஜாயா டைம்ஸ் ஸ்குவேர் போன்ற இடங்களோடு லாலாபோர்ட்டில் ஒரு நிறைவைக் காணும்” என்று அவர் மேலும் சொன்னார்.

நாக மற்றும் சிங்க நடனங்களோடு தொடங்கப்படும் இந்த நடைபயணத்தில் சீன பாரம்பரிய படைப்புகளோடு கண்கவர் ஆடைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் பங்கேற்பாளர்களை மகிழ்விக்கும் என்று பிபிகேஎல்சிசி சுற்றுலா சங்கத் தலைவரும்  வளமிக்க கோலாலம்பூர் மெது ஓட்ட கூட்டு ஏற்பாட்டு குழு தலைவருமான எங் யே சென் தெரிவித்தார்.

“இது  வெறும் சீனப் பெருநாளைக் கொண்டாடுவதற்கான மெது ஓட்டம் மட்டும் கிடையாது, கோலாலம்பூர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக உள்ளூர்வாசிகள் ஆற்றிய பங்களிப்பைப் போற்றுவதற்கும் ஆகும்” என்று இச்செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றம், எம்பிபி புக்கிட் பிந்தாங், ருக்குன் தெதாங்கா, பிபிகேஎல்சிசி,  ஃபாரென்ஹெய்ட் 88, லோட் 10, பெவிலியன் கேஎல், லாவ் யாட் பிளாசா, சுங்கை வாங் பிளாசா , சூரியா கேஎல்சிசி, பெர்ஜாயா டைம்ஸ் ஸ்குவேர், லாலா போர்ட் போன்ற நிறுவனங்களும் இந்த மெது ஓட்டத்திற்கு  ஆதரவு வழங்குகின்றன.

இச்செய்தியாளர் கூட்டத்தில் கோலாலம்பூர் மாநகர் மன்ற ஆலோசனை வாரிய குழு உறுப்பினர்கள் லாய் சென் ஹெங் மற்றும் கார்மன் லியோங் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.