கோலாலம்பூர் பிப்.24-
இவ்வாண்டுக்கான புதிய பள்ளி தவணை வரும் மார்ச் மாதம் தொடங்கவிருக்கும் வேளையில் தித்திவாங்சா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6,000 மாணவர்களுக்கு தோட்ட மற்றும் மூல தொழில் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி இன்று புத்தகப் பைகள் மற்றும் அன்பளிப்புகளை வழங்கினார்.
இங்குள்ள அம்னோ மண்டபத்தில் காலை மற்றும் பிற்பகல் என இரு கட்டங்களாக நடைபெற்ற “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” திட்டத்தின் கீழ் மலூரி பகுதியைச் சேர்ந்த 6,000 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் தலா 100 வெள்ளி ரொக்கமும் வழங்கப்பட்டன.
இந்த ரொக்கம் மாணவர்கள் தங்களுக்குரிய பள்ளிச் சீருடைகளை வாங்குவதற்கு உதவும் என்று டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் பள்ளி தவணை காலத்தை முன்னிட்டு தித்திவங்சா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு பற்றுச்சீட்டுகளையும் புத்தகப் பைகளையும் தாம் வழங்கி வருவதாக அவர் சொன்னார் .
அவ்வகையில் கடந்த வாரம் கம்போங் பாரு பகுதியில் 1,500 மாணவர்களுக்கும் கெராமாட் பகுதியில் 1,000 மாணவர்களுக்கும் பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக மலூரியில் மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
மொத்தத்தில் தித்திவாங்சா தொகுதியில் 8,500 மாணவர்களுக்கு இத்தகைய உதவி வழங்கப்பட்டிருப்பதாக இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜொஹாரி கூறினார்.




