கோலாலம்பூர், செப். 28-
கொள்கலன் மற்றும் வாகனங்களில் மறைத்து வைத்துக் கொண்டு வரப்படும் போதைப்பொருள், சுடும் ஆயுதங்களைக் கண்டுபிடிக்கக்கூடிய உயர்தர தொழில்நுட்ப ஸ்கேனரை மலேசியா வாங்கும் என்ற துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடியின் அறிவிப்பை மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் (மாட்டா) வரவேற்பதாக அதன் தலைவர் டத்தோ டான் கோக் லியாங் தெரிவித்தார்.

இதன் மூலம் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு கடத்தல் நடவடிக்கைகள் துடைத்தொழிக்கப்படுவது மட்டுமின்றி சுற்றுப்பயணிகள் கேஎல்ஐஏ உட்பட மலேசியாவிற்கு வந்து செல்வதில் மிகவும் வசதியாக இருக்கும். இதில் கைமுறையிலான சோதனை நடத்தப்படக் கூடாது என்று வலியுறுத்தப்படுவதற்குக் காரணம் உலகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வோருக்கு அதிகாரிகள் யாராவது சோதனை மேற்கொண்டால் அது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி விடும் என்று ஓர் அறிக்கையில் டான் கோக் லியாங் குறிப்பிட்டார்.

இந்த ஸ்கேனர் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுவதால் இதன் மூலம் தீய நோக்கம் கொண்டவர்கள் தடுக்கப்படுவதுடன் மலேசியாவில் பாதுகாப்பு உயர் நிலையில் இருப்பதை உணர்ந்து சுற்றுப்பயணிகள் விமான நிலையத்தின் வாயிலாகவே வருவர். அதனால் இந்த அணுகுமுறை நாட்டிற்கு வருகைப் புரியும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க வகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக டான் கோக் லியாங் கூறினார்.