கோலாலம்பூர், செப்.29 –
வரும் அக்டோபர் 27 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தாக்கல் செய்யவுள்ள 2018 வரவு செலவுத் திட்டத்தில் எந்த ஒரு வரியும் ஏற்றப்படாது என இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் புதிய வரியை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை என அவர் சொன்னார். வாழ்க்கை செலவின அதிகரிப்பால் அவதியுற்று வரும் மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 2018 வரவு செலவுத் திட்டம் அமையும் என அவர் உறுதி அளித்தார்.
நாட்டின் பொருளாதாரம் 5.6 விழுக்காட்டில் இருந்து 5.8 விழுக்காடாக உயர்ந்திருப்பதால், கடந்த ஆண்டைக் காட்டிலும் 2018 வரவு செலவுத் திட்டம் நேர்மறையானதாக இருக்கும் என ஜொஹாரி கூறினார்.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால், 2018 வரவு செலவுத் திட்டம் மக்களுக்கு சிறந்த அணுகூலங்களை வழங்கும் என ஜொஹாரி தெரிவித்தார்.


