கோலாலம்பூர், செப். 29-
இசை உலகின் அரசன் இசைஞானி இளையராஜாவின் ராஜா தி ஒன் மேன் மாபெரும் இசை நிகழ்ச்சி அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறவிருக்கின்றது. மை ஹிவன் இண்டர்நேஷனல் வழங்கும் இந்த இசை நிகழ்ச்சியில் 90 இசை கலைஞர்களுடன் இசைஞானி இளையராஜா கலந்து கொள்கிறார்.
பிரபல பின்னணி பாடகர்கள், மனோ, சித்ரா, கார்த்திக், ஹரிஹரன், சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா உட்பட பல முன்னணி பாடகர்கள் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால், இந்த நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மலேசிய ரசிகர்களுக்கான இதுவரை இசைஞானி இளையராஜா நிகழ்ச்சியில் இடம்பெறாத பல புதிய சுவாரஸ்யமான பல அங்கங்கள் இதில் உள்ளன. அதனால் சென்னையில் பரபரப்பான ஒத்திகையில் இளையராஜா ஈடுபட்டுள்ளார்.
புக்கிட் ஜாலில் அக்ஸிதா அரங்கில் 12000 பேர் அமரலாம். தற்போது அதற்கான டிக்கெட்கள் பரபரப்பான விற்பனையில் உள்ளன. குறிப்பாக இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு சிங்கப்பூரிலிருந்தும் இதர ஆசிய நாடுகளிலிருந்தும் பல இசை ரசிகர்கள் வருகைப் புரிகின்றார்கள்.
இசைஞானியின் பாடல்கள் எப்படி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதோ, அதேபோல் அவரது பின்னணி இசைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதானல் இந்த இசை நிகழ்ச்சியில் 15 நிமிடத்திற்கு இடைவிடாத பின்னணி இசையை கேட்பதற்கும் இசை ரசிகர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
இப்படிப்பட்ட இசை நிகழ்ச்சி இதுவரையில் மலேசியாவில் நடந்ததில்லை. இனியும் நடக்கப்போவதில்லை. 90 பின்னணி இசை கலைஞர்களோடு ஒரு நிகழ்ச்சி நடப்பதென்பது, சாதாரண காரியமல்ல. அதோடு அது இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியாக இருந்தால் எப்படி இருக்குமா அந்த உச்சம் இதில் சற்றும் குறையாது என இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டு குழுத் தலைவர் ஷாஹுல் ஹமிட் கூறினார்.
நாடு தழுவிய நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் பரபரப்பான விற்பனையில் உள்ளன. குறிப்பாக 2013ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்கள் இறுதி நேரத்தில் பெற முயற்சித்தவர்கள் பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால் இம்முறை முன்னமே டிட்கெட்களை வாங்கிக் கொள்வது அவசியமென அவர் கேட்டுக் கொண்டார்.


