சுங்கைபிசி, செப், 29-

அன்னை சரஸ்வதியின் பக்கத்தில் இருக்கும் அன்னப்பறவைப் போல பகுத்தறிந்து செயல்படும் பக்குவத்தை அனைத்து மாணவர்களும் கொண்டிருக்க வேண்டுமென பிரகாஷ் ராவ் வலியுறுத்தினார். சுங்கை பூலோ, ஆர்,ஆர்.ஐ. தமிழ்ப்பள்ளியில் நடந்த சரஸ்வதி பூஜையில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறினார். சரஸ்வதியிடம் இருக்கும் அன்னப்பறவை, பாலுடன் தண்ணீர் கலந்திருந்தாலும், அதிலிருந்து பாலை மட்டும் தனியாகப் பிரிக்கும் தன்மையைக் கொண்டது.

அதேபோல் மாணவர்கள் தங்கள் பயணத்தில் பலதரப்பட்ட அனுபவங்களையும் மனிதர்களையும் சந்திக்க நேரிடும். அதில் சிறந்தவர்களை அல்லது பயனுள்ளவற்றை மட்டும் தங்களின் வாழ்க்கைக்குத் துணையாக கொண்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

கல்வி கற்றவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் தங்களை தற்காத்துக் கொள்வார்கள். அதோடு அவர்களால் எளிதில் சிறந்த எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. அதனால் கல்விக்காக எதையும் தியாகம் செய்யலாம் என அவர் தெரிவித்தார்.

சுங்கை பூலோ ஆர்.ஆர். ஐ. தமிழ்ப்பள்ளியில் நடந்த சரஸ்வதி பூஜையில் மாணவர்கள், பெற்றோர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இதில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான மொத்த செலவையும் ம.இ.கா. சுபாங் தொகுதி ஏற்றுக் கொண்டது.

இந்த விழாவின் போது, அண்மையில் தீ விபத்தில் வீட்டை இழந்த ருக்குமாறனின் பிள்ளை பேரரசியின் கல்வி செலவினங்களுக்காக சுபாங் ம.இ.கா. தொகுதி 500 வெள்ளியை வழங்கியது. முன்னதாக அவர்கள் தீயில் வீட்டை இழந்தபோது, வாடகை வீட்டிற்கு செல்வதற்கும் இதர செலவிற்கும் சுபாங் ம.இ.கா. தொகுதி 3,800 வெள்ளியை வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த சரஸ்வதி பூஜையில் சுபாங் தொகுதி ம.இ.கா. தலைவர் சௌந்தர்ராஜன், தொழிலதிபர் நாதன் சங்கரன், பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.விஜயராணி, பள்ளியின் வாரியத் தலைவர் மாறன் எனப் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.