கோலாலம்பூர், ஜூன் 28-
மஇகா நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் அடைய கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்று செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் கூறினார்.
மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் இந்தியர்களின் நலனுக்காக பல திட்டங்களை தீட்டி வருகிறார். இந்த இலக்குகளை அடைய கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமையைப் பேண வேண்டும் என்று அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் முதன்முறையாக உதவி தலைவர் பதவிக்கு போட்டியிடும் நெல்சன் கேட்டுக் கொண்டார்.
“இந்தியர்களின் தாய்க் கட்சியாக மஇகா திகழ்கிறது. கல்வி மற்றும் பொருளாதாரத்தில் இந்தியர்கள் சிறந்து விளங்குவதற்காக பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை கட்சி வகுத்து வருகிறது. கட்சியின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோருடன் இணைந்து திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இத்தேர்தலில் உதவி தலைவர் பதவிக்குத் தான் போட்டியிடுவதாக அவர் சொன்னார்.
வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் மஇகாவின் மூன்று உதவி தலைவர்களுக்கான போட்டியில் டத்தோ டி.மோகன், டத்தோ முருகையா, செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் மற்றும் டத்தோ அசோஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.