கோலாலம்பூர் ,ஜூலை 27 –
உயிரிழப்புக்கு இட்டுச் செல்லும் பகடி வதை சம்பவங்களுக்குத் தீர்வு காணும் வகையில் இதனைப் புரிவோருக்கு கடும் தண்டனை விதிக்கக் கோரி மஇகா தேசிய மகளிர் பிரிவு அரசாங்கத்திடம் மகஜர் ஒன்றை சமர்ப்பிக்கவிருக்கிறது .
இவ்விவகாரத்தை மேலவைக்குக் கொண்டு செல்லும் பொருட்டு மேலவை உறுப்பினர் டத்தோ நெல்சன் ரெங்கநாதனிடம் மகஜர் ஒன்றை தாங்கள் சமர்ப்பிக்கவிருப்பதாக மஇகா தேசிய மகளிர் பிரிவு தலைவி சரஸ்வதி நல்லதம்பி தெரிவித்தார் .
“ இந்த மகஜரை மஇகா கல்வி குழு தலைவருமான டத்தோ நெல்சனிடம் ஜூலை 30ஆம் தேதி நாங்கள் ஒப்படைப்போம். எங்கள் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம் “ என்று இங்குள்ள மஇகா தலைமையகத்தில் மகளிர் பிரிவு பொறுப்பாளர்களுடனான கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
இஷா என்ற ராஜேஸ்வரியின் தற்கொலை சம்பவம் நாட்டில் இனியும் சசதொடரக் கூடாது. அதே வேளையில், இணைய பகடிவதையில் ஈடுபடுவோருக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றார் கெமெலே சட்டமன்ற உறுப்பினருமான சரஸ்வதி.
இதனிடையே, மஇகா தேசிய மகளிர் பிரிவு நாடளாவிய நிலையில் மக்களுக்கு ஆக்கப்பூர்வ சேவையை ஆற்றும் பொருட்டு அண்மையில் தலைமைத்துவ பயிற்சியை நடத்தியதாக சரஸ்வதி குறிப்பிட்டார்.
“எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் (சொக்சோ) சேவைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும்”என்றார்.
மாநில பொறுப்பாளர்கள் அனைவரும் தத்தம் கடமைகளை செவ்வனே ஆற்றுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.
மகளிர் பிரிவு பொறுப்பாளர்களுடனான இன்றைய முதலாவது கூட்டத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டம் நடத்தப்படும். அவ்வகையில் அடுத்த கூட்டம் நெகிரி செம்பிலானில் நடத்தப்படும் என்றார்.


