கோலாலம்பூர்,  ஜூலை 28-

 விரைவில் நடைபெறவிருக்கும் மிஸ்டர் மலேசியா  உடற் கட்டழகர் போட்டியில்  பங்கேற்கவிருக்கும்   நிஷேந்திரன் பொன்னுசாமிக்கு  மஇகா  விளையாட்டுப் பிரிவு  நிதியுதவி வழங்கியது. 

  பேரா மாநிலத்தைச்  சேர்ந்த  நிஷேந்திரன் (28) வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி  ஜொகூரில் நடைபெறவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான  மிஸ்டர் மலேசியா  உடற் கட்டழகர் போட்டியில்  பங்கேற்கவிருப்பதாக   மஇகா  தேசிய விளையாட்டு பிரிவு தலைவர்  அண்ட்ரூ டேவிட்   தெரிவித்தார் . 

 “ஓர் இளைஞரான நிஷேந்திரன்  உடற் கட்டழகர் துறையில்  தனது இலட்சியத்தை அடைவதற்காக  மேற்கொள்ளும் முயற்சிகள்  என்னை பிரமிக்க வைக்கின்றன” என்றார் அவர். 

 இத்துறையில் 15 ஆண்டுகள்  அனுபவம்  உள்ள இவர்  மாநில ரீதியில்  பல பதக்கங்களையும் வென்றுள்ளார் .

 இவருக்கு    மஇகா விளையாட்டுப் பிரிவு  நிதியுதவி ,  தங்குமிட வசதி  மற்றும்  விமான டிக்கெட்  ஆகியவற்றை வழங்கியுள்ளது என்று அறிக்கை ஒன்றின் வழி  அண்ட்ரூ டேவிட் குறிப்பிட்டார் . 

 இளைஞர்களுக்காக வருங் காலங்களில்  விளையாட்டு  பிரிவின் ஒத்துழைப்புடன்  பல பயிற்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படும் .குறிப்பாக, உடற் கட்டழகர்  விளையாட்டு குறித்த விழிப்புணர்வு  மற்றும்  இத்துறையில்   ஆர்வமுள்ளவர்களைக்  கவரும் திட்டங்களும்  இவற்றில் அடங்கும் என்றார் மஇகா  மத்திய செயலவை உறுப்பினருமான அவர் .

 அதே வேளையில், தற்காப்பு கலை மற்றும்  உடற் கட்டழகர்  மீதான சிறப்பு செயற்குழு ஒன்றும்  அமைக்கப்படும்  என்று அவர் மேலும்   கூறினார் .

வரும் ஆகஸ்ட்  2ஆம்  தேதி தொடங்கி 5ஆம்  தேதி வரை  ஜொகூர்  பாரு  திஸ்டல்  ஹோட்டலில் நடைபெறும்   உடற் கட்டழகர் போட்டியில்  பங்கேற்கும்  அனைவருக்கும்  அண்ட்ரூ டேவிட் தனது  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் .