கோலாலம்பூர், ஜூலை 28-

  வரும்  செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் மைபிபிபி தேசிய பேராளர் மாநாட்டில் கட்சியின் நிலைப்பாடு குறித்து பேராளர்கள் முடிவு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டது. 

இம்மாநாடு தலைநகர், உலக வாணிப மையத்தில் காலை மணி 9.00 தொடங்கி மாலை வரை  நடைபெறும் என்று இக்கட்சியின் இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் குறிப்பிட்டார் . 

இதில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் , துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார். 

“அதே நேரத்தில், இம்மாநாட்டிற்கு அனைத்து கட்சி தலைவர்களையும் நாங்கள் அழைப்போம்”. 

“1,500 பேராளர்கள் பங்கேற்கும் இம்மாநாட்டில் கட்சியின் அடுத்த கட்ட  இலக்கு குறித்து  முடிவு செய்யப்படும். இது ஒட்டுமொத்த பேராளர்களின் முடிவாகும். இதனை வாக்குகள் மூலம் இவர்கள் தீர்மானிப்பர்” என்று இங்குள்ள மைபிபிபி கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற உச்சமன்ற கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

“இதைத் தவிர்த்து, கட்சித் தலைவரின் தவணை காலம், கட்சியின் சின்னம், துணைத் தலைவர் நியமனம் உள்ளிட்ட கட்சி விதிகளில் மாற்றங்கள் குறித்தும் இம்மாநாட்டில் முடிவு செய்யப்படும் “என்றார். 

“இதுகாறும் கட்சியில் துணைத் தலைவர் இல்லாதது பல சிக்கல்கள் உருவாகக் காரணமாகிவிட்டது.ஆகையால்,துணைத் தலைவர் பதவி வருங்காலங்களில் கட்சிக்கு பல வழிகளில் நன்மை  தரும்” என்று அவர் விவரித்தார்.

செப்டம்பர் 1ஆம் தேதிக்குப் பின்னர் கட்சி புதிய திசையை நோக்கி பயணம் செய்யும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். 

“மைபிபிபி தலையாட்டும் ஒரு கட்சி கிடையாது. எங்களுக்கும் சுய மரியாதை, சுய கௌரவம் உண்டு. தேசிய முன்னணியிடமிருந்து இதுவரை எந்தவொரு  பதிலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இனி எங்களின் இலக்கை நோக்கி நாங்கள் பயணிப்போம். அதனை வரும் மாநாட்டில் பேராளர்கள் முடிவு செய்வர் “என்று லோகபாலா வலியுறுத்தினார்.