காஜாங், ஆக. 1-

ஆயுதமேந்தி வீடு புகுந்து கொள்ளையிட்ட  குற்றத்திற்காக   பொது நடவடிக்கை  பிரிவைச் (பிஜிஏ) சேர்ந்த மூவரை தாங்கள் கைது செய்த தாக போலீசார் உறுதிப்படுத்தினர்.

 செமினி, கம்போங் பாசீர், ஜாலான் சுங்கை பெனிங்கில் நடந்த இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில்  புதன்கிழமை  பின்னிரவு  12. 17 வாக்கில்  தங்களுக்குப்  புகார் கிடைத்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் ஒமார் தெரிவித்தார். 

 இம்முவரில் 32 மற்றும் 35 வயதுடைய இருவர்  பின்னிரவு  வேளையில் செராஸ்  நடவடிக்கை தளத்தில் மேற்கொள்ளப்பட்ட    சோதனை  நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாக அவர்  சொன்னார். 

 இவ்விருவரும்  ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பர்  என்று  அறிக்கை ஒன்றின் வழி  உசேன்  ஒமார் குறிப்பிட்டார். 

 “மற்றொரு சந்தேகப் பேர்வழியான  24 வயது இளைஞர்  காஜாங் போலீஸ் தலைமையகத்தில்   சரணடைந்தார் . இவரைத் தடுப்பு காவலில் வைப்பதற்கான  உத்தரவைப் பெற   போலீஸ்  நாளை விண்ணப்பம் செய்யும் ” என்றார் அவர்.

 ஆயுதமேந்தி கொள்ளையில் ஈடுபட்டதாக  இவர்கள் மீது 1971 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டம் (கூடுதல் அபராதம்) செஷன்ஸ் 3 கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இச்சட்டம் குற்றவாளியென நிரூபிக்கப்படுவோருக்கு 30 முதல் 40 ஆண்டு வரையிலான சிறை மற்றும் 12 பிரம்படிகள் விதிக்க வகை செய்கிறது.