ஈப்போ, நவ. 23-

இன்று நடைபெற்ற 2024 ஆம் ஆண்டு பேரா மாநில நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் மாநில சுல்தான் நஸ்ரின் முய்ஜூடின் ஷா தம்பதியர் சிறப்பு வருகை புரிந்தது நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.

சுல்தான் நஸ்ரின் முய்ஜூடின் ஷா- ராணி துவாங்கு ஜாரா சாலிம் தம்பதியர் பிற்பகல் 3.30 மணியளவில் இங்குள்ள இந்திரா மூலியா அரங்கை வந்தடைந்தனர்.

பேரா ராஜா மூடா ராஜா ஜாஃபார் ராஜா மூடா மூசா, ராஜா டி ஹீலிர் பேரா ராஜா இஸ்கந்தர் சுல்கார்னைன் சுல்தான் இட்ரிஸ் ஷா மற்றும் ராஜா புவான் மூடா பேரா துங்கு சொராயா அப்துல் ஹாலிம் முகமது ஷா ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்தத் தீபாவளி பொது உபசரிப்பில் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ சாரணி முகமதுவும் வருகை புரிந்தார்.

இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் சுல்தான் நஸ்ரின் இங்குள்ள ஐந்து ஆதரவற்ற இல்லங்களைச் சேர்ந்த 67 சிறார்களுக்கு அன்பளிப்புகளை வழங்கினார்.

இந்திய பாரம்பரிய மற்றும் நவீன நடனங்கள், இசை நிகழ்ச்சி என கலா ரசனையுடன் கூடிய இந்த விருந்தோம்பல் நிகழ்ச்சியில் பல்வகை மற்றும் பல்சுவை உணவை அனைவரும் உண்டு மகிழ்ந்தனர்.

பிற்பகல் மணி 2.00 தொடங்கி மாலை மணி 5.00 வரை நடைபெற்ற இந்தத் தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் பல்லினங்களைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் கலந்து கொண்டனர்.