ஈப்போ, நவ. 23-

இனிப்பு வகை பலகாரங்கள் குறைக்கப்பட்ட நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரா மாநில தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் சுமார் 8,000 பேர் கலந்து கொண்டனர்.

மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில சுல்தான் நஸ்ரின் முய்ஜூடின் ஷா- ராணி துவாங்கு ஜாரா சாலிம் தம்பதியர் சிறப்பு வருகை புரிந்தனர்.

இந்த அரச தம்பதியரோடு ராஜா மூடா பேரா ராஜா ஜாபார் ராஜா மூடா, ராஜா டிஹிலிர் பேரா ராஜா இஸ்கந்தர் சுல்கர்னைன், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமது, அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தன்னார்வ தொண்டூழிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஈப்போ, இந்திரா மூலியா அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் உரை நிகழ்த்திய டத்தோஸ்ரீ சராணி முகமது நாட்டின் பல்லின மக்களின் ஒற்றுமையைக் கண்டு உலக நாடுகள் பொறாமை கொள்ளும் அளவுக்கு மலேசியர்கள் சமூக புரிந்துணர்வோடு வாழ்ந்து வருவதாகச் சொன்னார்.

விருந்துபசரிப்பு மற்றும் கலை நிகழ்ச்சியுடன் கூடிய இந்த நிகழ்ச்சியில் பல்லினங்களைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு தீபாவளி பொது இல்ல உபசரிப்பில் படைக்கப்பட்ட உணவு வகைகளில் இனிப்பு குறைக்கப்பட்டதாக நிகழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சிவநேசன் விவரித்தார்.

உதாரணமாக, சுவை பானத்திற்குப் பதிலாக கனிம நீரும் குறைந்த அளவு சர்க்கரை கொண்ட பலகாரங்கள், தேநீர் மற்றும் காப்பியும் பரிமாறப்பட்டதாக அவர் சொன்னார்.

2024 ஆம் ஆண்டு் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அரசாங்க நிகழ்வுகளில் நீரிழிவு நோய் கட்டுப்பாடு மீதான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.

பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் ஐக்கியத்தை வலுப்படுத்த இத்தகைய பொது உபசரிப்பு மிகவும் அவசியம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ம. இ. கா. தொடர்பு குழு தலைவர் டான்ஸ்ரீ எம். ராமசாமி , மாநில ஐ.பி. எப். தலைவர் மாணிக்கம் மற்றும் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்குச் சிறப்பு சேர்த்தனர்.