ஈப்போ, நவ. 25-

நாட்டில் உள்ள இந்தியர்களின் பிரச்னைகளைக் கவனத்தில் கொள்வதோடு அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய தாம் தயாராக இருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமது சையிட் ஹமிடி திட்டவட்டமாகக் கூறினார்.

தேசிய முன்னணியுடன் தொடர்ந்து கைகோர்த்து வரும் ம.இ.கா இதன் நடவடிக்கைகளுக்கு வழங்கி வரும் பங்களிப்பு அளப்பரியது என்றார் இக்கூட்டணியின் தலைவருமான சையிட் ஹமிடி.

அவ்வகையில் ம.இ.கா எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு அவர்களுக்கு நல்வழி காட்ட தாம் தயாராக இருப்பதாக

இங்குள்ள மேரு கேசுவரினா ஹோட்டலில் நடைபெற்ற மாநில நிலையிலான தேசிய முன்னணி மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

 

பேரா மாநிலத்தில் இந்தியர்களுக்கு அரசாங்க துறையில் வேலை வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன என்று முன்னதாக இம் மாநாட்டில் பேசிய மாநில ம.இ.கா.தலைவர் டான்ஸ்ரீ எம். ராமசாமி தெரிவித்தார்.

குறிப்பாக, இந்திய இளைஞர்கள் அரசாங்க துறைகளில் வேலைக்கு செய்யப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதை அவர் சுட்டிக் காட்டினார்.

உயர் கல்விக் கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு உட்பட பல விவகாரங்களை முன் வைத்ததோடு இந்திய சமுதாயத்தின் தேவைகள் நிறைவு செய்யப்படாத காரணத்தால் தேசிய முன்னணி மீது அதிருப்தி நிலை உருவாதையும் அவர் கோடி காட்டினார்.

இதற்குத் தனது உரையின்போது பதிலளித்த டத்தோஸ்ரீ சையிட் ஹமிடி , இந்திய விவகாரங்களைக் கவனிக்க தாம் தயாராக இருப்பதால் இவ்விவகாரத்தை ஊடங்களில் வெளியிட்டு சமூகத்தில் சர்சையை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதே வேளையில், தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தமது கவனத்திற்குக் கொண்டு வரும்படியும் தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளிடம் துணைப் பிரதமர் வலியுறுத்தினார்.