சித்தியவான், நவ. 25-

50 ஆண்டு கால மலேசிய தமிழ்க்கூறு நல்லுலகில் தடம் பதித்த எழுத்தாளர் கவிஞர் கோ.முனியாண்டி அனைவரின் கண்களையும் குளமாக்கி விடைபெற்றார்.

அவரது இறுதி ஊர்வலத்தில் எழுத்துலக அன்பர்கள் திரளாகக் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த கோ.முனியாண்டி தமது வாழ்நாளில் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்தின் ஏற்றத்திற்கும் பாடுபட்ட சமூகப் போராளி ஆவார்.

கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக, நாவல் படைப்பாளராக வலம் வந்தவர். நூல்கள் வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். வாழ்நாள் முழுக்க வாசித்துக் கொண்டே இருந்தார்.

அவர் பத்திரிகை நிருபராக இருந்து ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கவை.

நிருபர் எனும் பணியை மேற்கொள்ளும் அதே சமயத்தில் இங்கு வாழும் மக்கள் பிரச்சனைகளுக்கும் சமூக பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதில் களமிறங்கி போராடியவர். தன் எழுத்தாற்றல் மூலம் பல பிரச்சனைகளை வெளியில் கொண்டு வந்து மக்களுக்குத் தெரியப்படுத்தினார்.

அது மட்டுமில்லாமல் மலேசிய இந்து சபா முன்னெடுத்த இந்துக்களின் இடுகாட்டுப் பிரச்சனை, கருமக்கிரியை இடப்பிரச்சனை ஆயர்தாவார் தமிழ்ப்பள்ளி புது கட்டடப் பிரச்சனை போன்ற பல சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்குப் பத்திரிக்கையில் பிரசுரித்து தீர்வு காண முயற்சிகள் எடுத்திருக்கிறார் என கூறினார் மஞ்சோங் இந்துசங்க முன்னாள் தலைவர் தொண்டர்மணி தே. தனசேகரன்.

சிறுகதை தொகுப்பு ஒன்றினையும் ‘இராமனின் நிறங்கள்’ எனும் நாவலையும் வெளியிட்டுள்ள கோ.முனியாண்டி நம் நாட்டு புதுக்கவிதை உலகில் பெயர் பெற்றவர்.

நம் நாட்டு எழுத்தாளர்களின் 70 க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு படைப்பாளிகளின் மனம் குளிர வைத்துள்ளார்.

அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.