கோலாலம்பூர் , நவ. 25-
கல்வி வாயிலாக இந்திய சமூகத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதன் வழி தனது சமூக கடப்பாட்டை செவ்வனே நிறைவேற்றி வருகிறது ஸ்ரீ முருகன் நிலையம் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் புகழாரம் சூட்டினார்.
இது வெறும் டியூஷன் செண்டர் கிடையாது. கல்வியோடு கட்டொழுங்கு மற்றும் சமய நெறிகளையும் போதித்து பண்புமிக்க மாணவர்களை உருவாக்கும் ஓர் உன்னத கல்வி மையம் என்று அவர் வருணித்தார்.
இந்தப் புகழ் யாவும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் தோற்றுனர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜாவையே சாரும். அவரின் வழிகாட்டியோடு நிலையத்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி வரும் இணை இயக்குநர் சுரேன் கந்தா, கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ் மற்றும் குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகள்” என்று இந்நிலையத்தின் பிரமாஷ்திரா 2025 திட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.
மாணவர்களின் கல்வி அடைவு நிலையை நிர்ணயிப்பது தேர்வு. இது ஒவ்வொரு மாணவருக்கும் மிக அவசியம் என்று முன்னதாக நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் கணபதி ராவ் சுட்டிக் காட்டினார்.
சவால்கள்,சோதனைகள் என வாழ்வில் நமக்கு ஏற்படும் அனைத்து தடைகளையும் கடந்து வைரமாக ஜொலிக்க நமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொணர வேண்டும் என்று ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா வலியுறுத்தினார் .
விடா முயற்சி, தன்னம்பிக்கை, மன உறுதி போன்ற நேர்மறை எண்ணங்கள் வழி சாதனை படைக்க வேண்டும். நாம் சாதனையாளர்கள் என்ற எண்ணம் நம் மனதில் எப்போதுமே வேரூன்றி இருக்க வேண்டும் என்று நிகழ்ச்சியில் எழுச்சியுரை ஆற்றியபோது குறிப்பிட்டார்.
“பிரச்சனைகளைப் பற்றியே நாம் எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம். அவற்றிற்கான தீர்வைக் காண முயற்சி செய்ய வேண்டும்” என்றார்.
அதே வேளையில், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மன அழுத்தத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்திய மாணவர்கள் ஒருபோதும் கைவிடப்படமாட்டார்கள் என்றும் இந்நிகழ்ச்சியில் ஆணித்தரமாகக் கூறினார் சுரேஷ் கந்தா.
மாணவர்கள் நாடு மற்றும் உலகளாவிய நிலைய சவால்களை எதிர்கொள்வதற்கான ஆற்றலை வழங்குகிறது தேர்வு. அவ்வகையில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி ஆறாம் ஆண்டு மற்றும் படிவம் 3 மாணவர்களுக்காக நாடளாவிய நிலையில் ஸ்ரீ முருகன் நிலையம் நடத்திய தேர்வில் 5,000 மாணவர்கள் பங்கேற்றதாக ஸ்ரீ கணேஷ் தெரிவித்தார்.
இத்தேர்வு வழி மாணவர்களின் அடைவு நிலையை மதிப்பீடு செய்யும் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பெற்றோர்கள் கலந்து கொண்டது மிகவும் பயனளித்ததாகவும் அவர் விவரித்தார்.