ஷா ஆலம், நவ. 26-
ஷா ஆலம் மாநகர் மன்ற இந்தியப் பணியாளர்கள் சமூக நல அமைப்பின் (பாக்கி) ஏற்பாட்டில் தீபாவளி பொது உபசரிப்பு இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ. பென்கியூட் மண்டபத்தில் நடைபெற்றது.
ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ முகமது பவுஸி முகமது யாத்திம் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்வில் மாநகர் மன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகளோடு பாக்கி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த நிகழ்வில் வரவேற்புரையாற்றிய பாக்கின் அமைப்பின் தலைவர் சு.தங்கராஜூ, தாங்கள் முன்னெடுக்கும் நலத் திட்டங்களுக்கு மாநகர் மன்றம் (எம்.பி.எ.ஏ.) முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
மாநிலத்திலுள்ள 12 ஊராட்சி மன்றங்களில் முழு அங்கீகாரமும் மாநகர் மன்றத்திடமிருந்து மானியமும் பெறும் ஒரே இந்திய பணியாளர்கள் அமைப்பாக பாக்கி விளங்கி வருவதாகவும் கூறினார் .
இந்த அமைப்பு மேற்கொள்ளும் ஊழியர்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு மாநகர் மன்றம் பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்கி வரும் அதேவேளையில் திறன் பயிற்சிகள் மூலம் பணியாளர்கள் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்வதற்குரிய வாய்ப்பினையும் வழங்குகிறது என்று அவர் மேலும் கூறினார் .
கடந்த 17 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த பாக்கி அமைப்பில் தற்போது 80 இந்தியப் பணியாளர்கள் உறுப்பியம் பெற்றுள்ளதாகக் கூறிய தங்கராஜூ, தீபாவளி மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகளை நடத்துவதோடு ஊழியர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்காக பிரத்தியேக தன்முனைப்பு பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்து வருவதாகச் சொன்னார்.
“எங்களின் சமூக நலத்திட்டத்தின் ஒரு பகுதியாக அண்மையில் ஷா ஆலம், செக் ஷன் 21, இந்து இடுகாட்டை துப்புரவு செய்யும் பணியையும் மேற்கொண்டோம். இந்த அமைப்பின் திட்டங்களுக்கு மாநகர் மன்றத்தின் இந்திய கவுன்சிலர்கள் பெரிதும் உதவியாக இருந்து வருவதோடு திட்டங்களை அமல்படுத்துவதில் பொருளாதார ரீதியாகவும் உதவி வருகின்றனர் “என்றார்.
முன்னதாக, இந்த விருந்து நிகழ்வை தொடக்கி வைத்து உரையாற்றிய டத்தோ பண்டார், பணியாளர்களின் நலனுக்காக கடந்த 17ஆண்டுகளாக அளப்பரிய பணியை ஆற்றி வரும் பாக்கி அமைப்புக்கு தாம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
இத்தகைய பெருநாள் நிகழ்வுகள் மாநகர் மன்றத்தில் பணியாற்றும் பல்லின ஊழியர்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதற்கும் துணை புரியும் என்றார் அவர்.