கோலாலம்பூர், நவ.29- வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சின் நிதி உதவி கிடைக்கப்பெற்ற முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அடுத்த 3 ஆண்டு காலத்திற்கு எந்த ஒதுக்கீட்டையும் பெற அனுமதிக்கப்படமாட்டாது என திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டியை மறு ஆய்வு செய்யும்படி அந்த அமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் கோபிராஜன் சந்திரன் இக்கோரிக்கையை முன் வைத்தார்.

“இப்புதிய நிபந்தனை நியாயமற்றதாக இருப்பதோடு தற்காலத்திற்கு ஏற்புடையதல்ல. முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி விண்ணப்பத்தை இடம், பக்தர்களின் எண்ணிக்கை, ஆன்மீக நடவடிக்கைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும். சமூகத்தினரிடையே நன்னெறிகளை வளர்ப்பதில் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் பங்களிப்பு தேவை, உண்மையான நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும். மாறாக, ஒருசில வழிபாட்டுத் தலங்களின் அடிப்படை தேவைக்குத் தடை விதிக்கும் அணுகுமுறையைக் கையாளக் கூடாது” என்றார் கோபிராஜன்.

தேவைப்படும் வழிபாட்டுத் தலங்களுக்கு உதவி மறுக்கப்பட்டு மற்ற தரப்பினருக்கு ஒதுக்கீடுகளை வழங்கும் இந்நடவடிக்கை ஒருதலைபட்சமாகக் காணப்படுகிறது. அதிலும் வழிபாட்டுத் தலங்களுக்கான பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவுகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் தங்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து நிலைப்படுத்த அரசாங்கம், தனியார் துறை, தனி நபர்களின் நிதியுதவியைத்தான் சார்ந்திருக்கின்றன.

மேலும், வழிபாட்டுத் தலங்கள் தற்போது சமூக நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் மையங்களாகவும் திகழ்கின்றன. ஆண்டுக்கு வெ.50 மில்லியன் ஒதுக்கீட்டுத் தொகை இவற்றுக்கு உண்மையில் போதுமானதாக இல்லை. காரணம் அத்தொகையைப் பல்வேறு சமய வழிபாட்டுத் தலங்கள் பகிர்ந்து கொள்கின்றன. வீடமைப்பு ஊராட்சித் துறை துணை அமைச்சர் குறிப்பிட்டதைப் போல் முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிதி விண்ணப்பத்தில் 30 விழுக்காடு மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது

“இதில் கூடுதல் விண்ணப்பங்களுக்கு எவ்வாறு தீர்வு காண்பீர்கள்? விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதில் உண்மை மற்றும் நியாயத்தை உறுதிப்படுத்த முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான மதிப்பீட்டுச் செயற்குழுவில் முஸ்லீம் அல்லாத சமய பிரதிநிதி அடங்கிய ஆலோசனைக் குழு இருக்கிறதா?” என்று இவர் வினவினார்.

சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு முன்வைக்கும் பரிந்துரைகள் :-

1. கூடுதல் நிதி: முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய ஆண்டுக்குக் குறைந்தபட்சம் வெ.100 மில்லியன் கூடுதல் நிதிக்கு வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு அரசாங்கத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. மதிப்பீட்டுச் செயற்குழு: முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான மதிப்பீட்டுச் செயற்குழுவில் முஸ்லீம் அல்லாத சமய அறிஞர்களையும் உட்படுத்த வேண்டும்.

3. 3 ஆண்டு கால தடையை அகற்றுதல்: உண்மையில் தகுதி பெற்ற மற்றும் உதவிகள் தேவைப்படுகின்ற முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் செயல்பாட்டைத் தடுக்கும் மறு நிதி விண்ணப்பத்திற்கான 3 ஆண்டு தடை நிபந்தனையை வீடமைப்பு ஊராட்சித் துறை அகற்ற வேண்டும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களும் சமய மற்றும் சமூக மையங்களாகப் பங்காற்றுவதை உறுதிச் செய்ய முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கான நிதியை வழங்குவதில் அமைச்சு முழுமையாக, நியாயமாக மற்றும் பொறுப்புணர்வுடன் நடவடிக்கை எடுக்கும்படி கோபிராஜன் கேட்டுக் கொண்டார்.